பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதிலும் போராட்டம்

பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதை கட்டுப்படுத்த கோரியும் நேற்று நாடு முழுவதிலும் பொது வேலை நிறுத்தமும் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டன.

பெற்றோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில் பெற்றோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெற்றோல், டீசல் விலை உயர்வால் லொறி போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில்கள், விவசாயம், மீன்பிடி உட்பட பல தொழில்களில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதை கட்டுப்படுத்த கோரியும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் நேற்று நடத்தியது. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பெருந்தலைவர் மக்கள் கட்சி உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

வட மாநிலங்களில் சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனால் தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரயில், ஆட்டோ, தனியார் வாகனங்கள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

ஆனால் வடஇந்தியாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். ராகுல் காந்தி ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். இவர்களுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

ஊர்வலம் ராம்லீலா மைதானத்தை அடைந்ததும் அங்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மிக பிரமாண்டமான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தின. இதற்காக தலைவர்கள் அமர பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி மேடையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், சரத்பவார், சரத் யாதவ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.


Add new comment

Or log in with...