எதிரொளி விளையாட்டுக் கழகம் சம்பியன் | தினகரன்

எதிரொளி விளையாட்டுக் கழகம் சம்பியன்

அம்பாறை மாவட்டம் தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் தம்பியப்பா பூபாலபிள்ளை ஞாபகார்த்த லெவன் ஸ்டார் சம்பியன் வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது.

தம்பட்டை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இறுதி போட்டியிலேயே தம்பட்டை லெவன் ஸ்டார் கழகத்தை எதிர் கொண்டு சம்பியானானது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் தம்பிலுவில்; எதிரொளி விளையாட்டுக் கழகமும் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகமும் மோதிக் கொண்டது.

இறுதி போட்டியில் பங்கேற்ற வீரர்களின் அறிமுக நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் நாணயச் சுழற்சியினையும் நடாத்தி வைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் நிறைவில் 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எதிரொளி அணி 9 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற எதிரொளி அணிக்கான சம்பியன் கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன், உறுப்பினர் க.தர்மராஜா, பொறியியலாளர் ஆர்.யுவேந்திரா உள்ளிட்ட பொலிஸ் அதிகாரி, மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...