சம்மாந்துறை கோரக்கர் கிராமம் மாணவனின் ஒன்பது கண்டுபிடிப்புகள் | தினகரன்


சம்மாந்துறை கோரக்கர் கிராமம் மாணவனின் ஒன்பது கண்டுபிடிப்புகள்

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் ஒன்பது கண்டுபிடிப்புகள் இம்முறையும் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் 13 முதல் 16 வரை இலங்கை கண்காட்சி மற்றும் வர்த்தக சம்மேளன மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கண்காட்சிப் போட்டிக்கு வினோஜ்குமாரின் ஒன்பது கண்டுபிடிப்புக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவானது ஆண்டுதோறும் நடத்தி வரும் 'ஆயிரம் படைப்புகள்_2018' எனும் தேசிய புத்தாக்க கண்காட்சிக்கு தொடர்ந்து ஏழாவது வருடமாகவும் தேசிய மட்டத்துக்கு இம்மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வருடமும் ஒன்பது புதிய கண்டுபிடிப்புகளுடன் யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 19ம் திகதி கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் மட்டக்களப்பு மகாஜன தேசிய கல்லூரியில் நடைபெற்றன. இதில் இவர் பல்கலைக்கழக பிரிவில் 14 கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்திருந்தார்.

அதில் 9 கண்டுபிடிப்புகள் இம்மாதம் 13 முதல் 16ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் வர்த்தக சம்மேளன மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கண்காட்சிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பாதணிகளில் தூசு படியாத உறை, இலகுவாக கம்பிகளை இணைக்கும் கருவி, பெரிய வாகனங்களின் சில்லுகள் மற்றும் அதிகளவான முறுக்குத்திறன் தேவையான பொருட்களை இலகுவாக கழற்றும் கருவி, வினைத்திறனான நிறப்பூச்சுத் தூரிகை, கழிவான பொருட்களிலிருந்து மீள்சுழற்சி செய்யப்பட்ட பைவர், இரண்டு சக்கரங்களுடைய உதவியாளன், சூழல் நேய மீள்சுழற்சிப் போத்தல், வீட்டு நீர்சேமிப்புத் தாங்கியில் இருக்கும் நீரின் சுத்தத்தைப் பேணும் கருவி மற்றும் கடல் நீரின் மூலம் விவசாயம் செய்யும் முறை போன்ற ஒன்பது கண்டுபிடிப்புக்கள் இவருடையதாகும்.

இவர் ஆரம்பக் கல்வி கற்ற சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயம், உயர் கல்வி கற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் தொடக்கம் யாழ்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை இதுவரை 86 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.

சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த வினோஜ்குமாரிடம் அவரது முயற்சிகள், சாதனைகள் பற்றி வினவிய போது இவ்வாறு கூறினார்.

"நான் ஓய்வு நேரங்களில் எமது சூழலில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி அது பற்றி சிந்தித்து மாதிரிகளை உருவாக்குவேன். அதன் பின்னர் அதனை செம்மைப்படுத்தி முழுமையாக இயங்கும் அமைப்பாக தயாரிப்பேன். அதனை ஆராய்ந்து அது முன்னர் வேறொரு நபரினால் உருவாக்கப்படாதவிடத்து அதற்கு ஆக்கவுரிமைப் பத்திரத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற்றுக் கொள்வேன்

அதன் பின்னர் போட்டிகளுக்கு சமர்ப்பிப்பேன். போட்டிகளில் வெற்றி பெறுவது எனது பிரதான நோக்கமல்ல. எனது பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தவுடன் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு தேசிய விஞ்ஞான மன்றம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களுடனும் இணைந்து அதனை வணிகமயப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

கட்டட நிர்மாண வேலைகளின் போது சாதாரணமாக கம்பிகளை ஆணி அல்லது குறடுகளின் உதவி கொண்டு கையினால் திருகி இணைப்பது வழமையாகும். இதனால் கைகளில் வலிகளும் காயங்களும் ஏற்படுவதுடன் விரைவாக கம்பிகளை இணைக்க முடியாது போகும். மேலும் கட்டுக் கம்பிகள் வீணாகும். அவ்வாறு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக கம்பிகளைக் கட்டும் கருவியொன்றை ( Wire Building Tool) புதிதாக உருவாக்கியுள்ளேன். இக்கருவி மூலம் இரு கம்பிகளின் நான்கு பக்கங்களும் உறுதியாக இருக்குமாறு இணைப்பதுடன் இதில் உள்ள சுழலும் பொறியியல் தொழினுட்பத்தின் காரணமாக குறைந்த விசையைப் பயன்படுத்தி விரைவாகவும் நேர்த்தியாகவும் கம்பிகள் வீணாகாமலும் அழகாக கட்ட முடியும். இதன் ஒன்றின் உற்பத்தி விலை 370 ரூபாய் ஆகும். இக்கருவி கட்டட நிர்மான வேலை செய்யும் மேசன்மார் மற்றும் கூலியாட்களுக்கு மிகப்பயன் வாய்ந்த கண்டுபிடிப்பாகும்.

நான் ஒருவருடம் ஆராய்ந்து 11 மாதிரிக் கருவிகளை உருவாக்கினேன். எனினும் சரியான முறுக்கம் வரவில்லை. அம்முறுக்கத்தைப் பெறுவதே பிரச்சினையாகக் காணப்பட்டது. பின்னர் மின்சாரத்தில் இயங்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அது ஒன்றின் விலை 6500 ரூபாக்கு மேல் சென்றது. இது கூலித்தொழிலாளிகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. எனினும் முயற்சியைக் கைவிடாமல் சிறிய உருளை வடிவான குழாய்க் கம்பியினுள் சூழலும் தொழினுட்பத்தைக் கொண்ட அமைப்பை உருவாக்கினேன். அதன் பின்னர் அது வெற்றியளித்தது. மேலும் அது பற்றிய வரைபடங்கள் மாதிரிகளை உருவாக்கி செலவு குறைவான முறையிலும் இலகுவானதும் வினைத்திறனானதுமான Wire Building Tool இனை உருவாக்கினேன். இதற்கு ஆக்கவுரிமைப் பத்திரத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்."

இவ்வாறு வினோஜ்குமார் விபரித்தார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)

 


Add new comment

Or log in with...