அரசியல் தீர்வா, அபிவிருத்தியா? | தினகரன்

அரசியல் தீர்வா, அபிவிருத்தியா?

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய வேளையில் அவசரத் தேவையாக உள்ளது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வா இல்லையேல் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வும் அபிவிருத்தியுமா?

இம்மக்கள் விடயத்தில்,யுத்த முடிவுக்குப் பின்னர் எழுந்துள்ள முக்கியமானதொரு வினா இது! “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தருகின்ற புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகும். இதற்காக தமிழ் மக்களுக்கு வீணான நம்பிக்கையை இன்னமும் அளித்துக் கொண்டிருப்பதோ அல்லது காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றதாகும்.

சாத்தியப்படாத அரசியல் தீர்வை நம்பிக் கொண்டபடி தமிழினத்தை வழிநடத்துவதை கைவிட்டு விட்டு அம்மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிவகைகளில் இறங்குவதே புத்திசாலித்தனம். இல்லையேல் அரசியல் தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. ஏனைய இனங்கள் அபிவிருத்தியில் துரிதமாக முன்னேறிக் கொண்டு செல்கையில் தமிழினம் சீரழிவில் உழன்றபடி எத்தனை காலம்தான் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பது?”

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நோக்கி ஏனைய தமிழ் அமைப்புகள் வீசுகின்ற கணைகள் இவை!

தமிழ் அமைப்புகளும் வடகிழக்கிலுள்ள தமிழர்களும் இவ்வாறு நினைப்பதில் தவறில்லை. ஏனென்றால் யுத்த முடிவுக்குப் பின்னரான சுமார் பத்து வருட காலமாக அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் இன்றியபடிதான் தமிழினத்தின் காலம் வீணாகக் கழிந்து கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உட்பட அத்தனை விடயங்களிலும் தமிழினத்துக்கு புறக்கணிப்புக் காட்டப்படுகின்றது என்பதே பரவலான குற்றச்சாட்டாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் இத்தகைய ஆதங்கம் குறித்து அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதாக பொருட்படுத்திக் கொண்டதையும் காண முடியவில்லை.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென்று அங்கிருந்து எழுப்பப்படுகின்ற கோஷங்களுக்கெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க எதிர்வினையை வெளிப்படுத்துவது கிடையாது. உத்தேச அரசியல் யாப்பை மாத்திரமே தமிழ் மக்களுக்கு சுட்டிக் காட்டியபடி தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு.

தமிழ்க் கூட்டமைப்பின் இவ்வாறான ஒருதிசை நோக்கிய பயணம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், படையினர் வசமுள்ள எஞ்சிய காணிகளை மீட்டுக் கொள்ளல், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற விடயங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன என்று கூறுவதில் தவறு கிடையாது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதான புதிய அரசியல் யாப்பு ஒன்றை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கிடையில் நிறைவேற்றிக் கொள்வது சாத்தியமா?

இவ்வினா பிரதானமானது.

இவ்வினா தொடர்பாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பொருட்படுத்திக் கொள்வதாக இல்லை. சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற எண்ணமெல்லாம் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரிடம் கிடையாது. ‘வடக்கு, கிழக்குக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதானது சிங்கள மக்களுக்கு இழைக்கின்ற துரோகம்’ என்ற கருத்தையே பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலர் இன்னமும் கொண்டுள்ளனர். இலங்கையின் அரசியலுக்குள் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்படுகின்ற பௌத்த பீடாதிபதிகளும் வெளிப்படையாகக் கூறி வருகின்ற கருத்து இதுதான்!

இக்கருத்தையும் தற்போது தென்னிலங்கையில் பிரதான கட்சிகளுக்கிடையே நிலவி வருகின்ற அரசியல் போட்டிகளையும் வைத்துப் பார்க்கின்ற போது புதிய அரசியல் யாப்பை செயலுருப்படுத்துவதென்பது இயலாத காரியமென்றே தெரிகின்றது.

இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு என்ற பதங்களையெல்லாம் தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமே இன்னும் ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ‘அரசியல் தீர்வு’ என்ற குறிக்கோள் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏனைய தேவைகள் கடந்த சுமார் பத்து வருட காலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

“அரசியல் தீர்வு என்பதையெல்லாம் இப்போதைக்கு ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்” என்று தென்னிலங்கையின் தமிழ், சிங்கள அரசியல்வாதிகளே வடக்கு, கிழக்கு தமிழர் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கின்ற அளவுக்கு நிலைமை இப்போது ஆகியிருக்கிறது.

அரசியல் தீர்வு மீதான நம்பிக்கையீனம் என்றும் இதனை எடுத்துக் கொள்ள முடியும். அதாவது எதிர்க்கட்சியாக விளங்குகின்ற தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது நிலவுகின்ற நல்லிணக்க சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வட கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வையாவது கண்டுவிட வேண்டும் என்பதுதான் பலரதும் எண்ணமாக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் அடிமட்ட வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரம் குறித்து வெளியுலகில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அங்குள்ள பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் கவலை தருவதாக இருக்கின்றது. அங்கு வாழ்வோரில் ஏராளமானோர் நீண்டகால யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வறிய நிலைமைக்குச் சென்றுள்ளவர்களாவர்.

யுத்த முடிவுக்குப் பின்னரான மீள்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் அம்மக்களை இன்னுமே உரியபடி சென்றடையவில்லை. புனர்வாழ்வுத் திட்டங்களில் கூட அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை ஊழல்களும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

யுத்தத்தில் நலிவடைந்து போன மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை முன்னைய அரசாங்கம் தட்டிக்கழித்து விட்டது. அப்பணியை இன்றைய ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற்றிக் கொள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் அரசுக்கு ஒததுழைப்புக் கொடுக்கத் தவறி விட்டன என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இவ்வாறானதொரு சூழலில் அரசியல் தீர்வுக்கு சமாந்தரமாக அபிவிருத்தியிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை தமிழ் அரசியல் தரப்புக்கு உண்டென்பது உண்மை.


Add new comment

Or log in with...