ஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம் | தினகரன்

ஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்

ஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்-Sri Lanka Women-Won Asian Netball Championship
இலங்கை வலைப்பந்து அணியின் மிக உயரமான வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்...


2019 உலகக் கிண்ணத்திற்கு தெரிவு

சிங்கப்பூரில் இடம்பெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ண போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

இன்று (09) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணியை 69-50 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, 5 ஆவது முறையாக ஆசிய மகளிர் வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.

1989, 1997, 2001, 2009, 2018 ஆகிய 5 ஆசிய கிண்ணங்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளது.

இது தவிர இலங்கை அணி அடுத்தடுத்து இடம்பெற்ற 2012, 2014, 2016, 2018 ஆகிய தொடர்களில் தொடர்ச்சியாக 4 முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இலங்கை அணி, 1985 , 2012, 2014, 2016 ஆகிய தொடர்களில்  இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிய கூடைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்-Sri Lanka Women-Won Asian Netball Championship

இலங்கை வலைப்பந்து அணியின் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, தர்ஜினி சிவலிங்கம்

இத்தொடரில் இலங்கை அணியின் இச்சாதனைக்கு, இலங்கை அணி சார்பில் விளையாடி வரும் மிக 6 அடி 8 அங்குலம் (2.08m) உயரமான வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தின் பங்களிப்பு அபாரமானது.

இவ்வெற்றியை அடுத்து கருத்துத் தெரிவித்த, அவ்வணியின் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, "எனது அணி தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்ததோடு, "நீங்கள் இல்லாமல் இவ்வெற்றியை அடைந்திருக்க முடியாது. எங்களது பயிற்சியாளருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இப்போட்டியை காண வந்துள்ள இலங்கை இரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்தார்.

மலேசியா, ஜப்பான், மாலைதீவு (குழு A), இலங்கை, சீனா, இந்தியா (குழு B), சிங்கப்பூர், புருணை, பாகிஸ்தான் (குழு C), ஹொங்கொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் (குழு D) ஆகிய 12 அணிகள் மோதிய இத்தொடரில் இலங்கை அணி மோதிய அனைத்து போட்டிகளிலும் அவ்வணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய போட்டிகள்

  • முதல் சுற்று

சீனாவுடன் 137-05
இந்தியாவுடன் 101-29

  • இரண்டாம் சுற்று

சிங்கப்பூருடன் 74-61
மலேசியாவுடன் 62-59
ஹொங்கொங் உடன் 71-48

  • அரையிறுதி

ஹொங்கொங் உடன் 55-46

  • இறுதிப்போட்டி

சிங்கப்பூருடன் 69-50

அதற்கமைய, இத்தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவான இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு அணிகளும் எதிர்வரும் 2019 இல் இடம்பெறவுள்ள வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 உலகக் கிண்ண வலைப்பந்து போட்டிகள் இலங்கிலாந்தின் லிவர்பூலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய வலைப்பந்து சம்பியனான இலங்கை மகளிர் அணியின் தலைவர் சத்துரங்கி ஜயசூரியவுக்கு, தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவருக்கும் முழு அணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...