கோதுமை மா விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களையே பாதிக்கும் | தினகரன்


கோதுமை மா விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களையே பாதிக்கும்

ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்

 கோதுமை மா விலை அதிகரிப்பு மலையக மக்களை மட்டுமன்றி கோதுமை மாவை மூலப்பொருளாகக் கொண்டுள்ள சகலரையும் பாதிக்குமென்பதால் இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி தலையிட வேண்டுமென, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை தோட்டத் தொழியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. நாளாந்த உணவு தேவைக்காக கோதுமை மாவையே பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். இவ் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளிகளுக்கே இவ் விலை அதிகரிப்பு பாதிப்பாக அமையும். பொதுவாக 03 வேளை உணவு உட்கொண்டு வாழ்க்கை நடத்திய தோட்டப்புற மக்கள் இன்று 02 வேளை மாத்திரமே உணவு உண்ணும் நிலை உருவாகியுள்ளது.

சில பெருந்தோட்டப் புறங்களில் ஒரு குடும்பத்தில் இரவு வேளைகளில் பிள்ளைகளுக்கு மாத்திரம் உணவை வழங்கிவிட்டு பெற்றோர் உணவின்றி நித்திரைக்கு செல்கின்றனர். கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களுக்கு “வெந்தபுண்ணில் வேலைபாச்சுவதைப்” போலாகியுள்ளது.

சொகுசு வாகனங்கள், நட்சத்திர விடுதிகள் , வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் முதற்தர பயணச்சீட்டுக்களின் விலையை அதிகரித்தால் அது ஏழைகளைப் பாதிக்காது.

கோதுமை மாவின் விலையை அதிகரித்ததை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. பேக்கரிகளில் இன்று மலையக இளைஞர்களே கூடுதலாக தொழில் புரிகின்றனர். இந் நிலையில் இவர்களது வேலைவாய்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

எனவே இதுபற்றி ஜனாதிபதி தலையிட்டு இவ் விலை ஏற்றத்தை பரீசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...