உலக கரம் சம்மேளனத்தின் உப தலைவராக பராக்கிரம பஸ்நாயக்க | தினகரன்


உலக கரம் சம்மேளனத்தின் உப தலைவராக பராக்கிரம பஸ்நாயக்க

சர்வதேச கரம் சம்மேளனத்தின் பிரதித் தலைவராக பராக்கிரம பஸ்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென் கொரியாவில் நடைபெற்ற, சர்வதேச கரம் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

5ஆவது உலக கிண்ண கரம் போட்டிகள் அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்றபோதே இந்த விசேட பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பராக்கிரம பஸ்நாயக்க முன்னாள் சுங்கத் திணைக்கள பணிப்பாளராவார். தற்போது அவர் தேசிய சேவைகள் விளையாட்டு சங்கம், தேசிய சேவைகள் ஹொக்கி சங்கம் மற்றும் மேல் மாகாண பெட்மின்டன் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார்.

சர்வதேச கரம் சம்மேளனத்துக்கான உத்தியோகபூர்வ அதிகாரிகள் தெரிவு நான்கு வருடங்களுக்கொரு முறை விசேட பொதுக்கூட்டத்தின்போது இடம்பெறும். இம்முறை நடைபெற்ற விசேட பொதுக்கூட்டததில் சுபிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோசப் மயர் சம்மேளனத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த வி.டி. நாராயன் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வருட உலக கோப்பை கரம் போட்டிகளை இலங்கை வெற்றிபெற்ற அதேநேரம் சர்வதேச கரம் சம்மேளத்தின் பிரதித் தலைவர் பதவியையும் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அடுத்த ஆசிய கரம் சம்பியன் போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடத்த பராக்கிரம பஸ்நாயக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அதேநேரம் சார்க் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கரம் விளையாட்டை சேர்த்துக்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளார்.


Add new comment

Or log in with...