தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல் | தினகரன்


தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல்

மேலிடத்தில் புகார் தெரிவிக்க ஆதரவாளர்கள் டெல்லி பயணம்

தமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இடையே மோதல் முற்றியுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டார். அதன்பின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கும் இளங்கோவனுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி வெளிப்படையாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அக்கட்சியின் அகில இந்திய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கடந்த 4-ம் திகதி சென்னை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சஞ்சய் தத் முன்னிலையிலேயே திருநாவுக்கரசர் - இளங்கோவன் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். கைகலப்பு மட்டுமன்றி கற்கள் வீசியும் தாக்கினர். இதில் ஓரிரு நிர்வாகிகள் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏவிஎம் செரீப், பொன். மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் ஆகிய 7 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.இது இளங்கோவனை கொந்தளிக்கச் செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் 7 பேரும் வெளியிட்ட அறிக்கையில், “திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்தான் வேண்டுமென்றே பிரச்சினை செய்தனர். ஆனால் எவ்வித விசாரணையும் இன்றி எங்களை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிப்போம்'' என கூறியிருந்தனர்.

இந்தச் சூழலில் திருநாவுக்கரசர் குறித்து புகார் தெரிவிப்பதற்காக இளங்கோவன் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இது தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “காங்கிரஸ் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அகமது படேல், தேர்தல் நிதி வசூல் தொடர்பாக மாநிலப் பொருளாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பு வந்தும் அதை பொருளாளர் நாசே ராமச்சந்தினுக்கு தெரிவிக்கவில்லை. அகமது படேல் நேரடியாக தொலைபேசியில் நாசே ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி சென்றுள்ள அவர், திருநாவுக்கரசரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறார்'' என்றனர்.


Add new comment

Or log in with...