பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை

மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், டில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுடனான உறவு தொடர்பாக இரு நாடுகளிடையே ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் மத்தியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவுக்கு அதிநவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், என்எஸ்ஜியில் இந்தியா இடம்பெற இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கன் குறித்த டிரம்ப்பின் கொள்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பாக அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்கிறோம். பாகிஸ்தானிலிருந்து உற்பத்தியாகும் பயங்கரவாதிகளால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா கூறுகையில், அமைதி, நம்பிக்கை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான வழிகளில் ஒத்துழைப்பு வழங்க இந்த கூட்டம் உறுதி செய்தது. பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சவால்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் வாங்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வளர்ச்சிக்கான புது சகாப்தத்தில் இரு நாட்டு உறவை முன்னெடுத்து செல்வது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிப்போம். இரு நாட்டு உறவுகள் மற்றும் பகிரப்பட்ட உறவு தொடர்பாக நாங்கள் ஆக்கபூர்வமான பேச்சு நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டறிக்கை

பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரு தரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அமைச்சர்கள் உறுதி பூண்டுள்ளனர். இந்தியா அமெரிக்காவின், முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்பதை உறுதி செய்த அமைச்சர்கள், பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...