அரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல் | தினகரன்

அரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல்

ஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வாணமாகியதால் ராஜபக்ஷ கும்பல் தமது அரசியல் புதை குழியைத் தாமே தோண்டிக் கொண்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

எதிரணியின் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் அமைக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்திலே எதிரணி இந்த  மக்கள் சக்தி கண்காட்சியை திட்டமிட்டது. பணம்,சாப்பாட்டு பார்சல், சாராயம் என்பவற்றை முடிந்தளவு வழங்கி நாடு பூராகவும் இருந்து ஆதரவாளர்களை கொழும்பில் திரட்டுவது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் மக்கள் சக்தி தங்களுடன் இருப்பதாக காண்பித்து தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, தீர்ப்புகளைத் தாமதப்படுத்த அவர்கள் கனவு காண்கின்றனர்.

ஆனால் வீதிவழியே போதையில் விழுந்து கிடந்த மொட்டு ஆதரவாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் முன்னர் எதிர்த்த "சுவசெரிய" அம்பியூலன்ஸ்களே வந்திருந்தன.

ஒன்றிணைந்த எதிரணியினதும் பொது ஜன பெரமுனவினதும் ஆர்ப்பாட்டம் படுதோல்விய டைந்துள்ளது. முன்னர் முழு கொழும்பையும் சுற்றிவளைக்க திட்டமிட்டார்கள். பின்னர் அந்த முடிவை கைவிட்டு இரவு வரை எதிர்ப்பு நடத்த தீர்மானித்ததாக ஊடகங்கள் கூறின. எனினும் நள்ளிரவாக முன்னரே போராட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பின்னடைவு கடந்த காலத்தில் பெற்ற பாரிய தோல்வியாக மாறியுள்ளது.

நுகேகொடையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அடுத்து கிருலப்பனை பின்னர் கண்டி, காலிமுகத்திடல் எனப் பல இடங்களில் கூட்டம் நடத்தினார்கள். இச் சந்தர்ப்பங்களில் அரசைக் கவிழ்க்கப் போவதாகவே சவால் விட்டார்கள். இவ்வாறு எட்டுத் தடவைகள் ஆட்சியை கவிழ்க்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி,பிரதமர், அரசாங்கத்தை இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தான் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பில் தாமதித்தாவது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் நிறைவு செய்யப்படும். இதன் பெறுபேறு எல்லோரையும்விட ராஜபக்‌ஷ கும்பலுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தான் மக்கள் எழுச்சி பேரணி நடத்தப்பட்டது. (பா)

 


Add new comment

Or log in with...