முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி இலங்கை−மாலைதீவு பலப்பரீட்சை

பங்களாதேஷின் பங்கபந்து தேசிய அரங்கில் இடம்பெற்ற சாப் சுசுகி கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் இலங்கை கால்பந்து அணி 2-−0 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

சாப் சுசுகி கிண்ணம் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய நிலையில் தொடரில் குழு பி யில் அங்கம் வகிக்கும் இலங்கை அணி பலம் மிக்க இந்திய அணியை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்கொண்டது.

போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்தில் இந்திய முன்கள வீரர் மூலம் உதைத்த பந்தை இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தடுக்கும்பொழுது பந்து முன்னேற, அதனை இலங்கை பின்கள வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

11ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் மோசமான பந்துப் பரிமாற்றத்தின்போது மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற இந்திய வீரர்கள் இலங்கை அணியின் பெனால்டி எல்லை வரை அதனைக் கொண்டு சென்று கோல் நோக்கி உதைத்தனர். அதனை சுஜான் சிறப்பாகத் தடுத்தார்.

மீண்டும் 16ஆவது நிமிடத்தில் இந்திய வீரர்கள் மத்திய களத்தில் இருந்து பெற்ற ப்ரீ கிக் உதையை கோலுக்கு அண்மையில் இருந்து சுஜான் பிடித்தார். எனினும், தொடர்ந்த நிமிடங்களில் இலங்கை வீரர்கள் இந்திய அணியின் கோல் முயற்சிகளைத் தடுத்து ஆடினர்.

போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக கோல் காப்பாளர் சுஜான் பெரேராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

அதே நிமிடத்தில், இலங்கை அணியின் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற இந்திய வீரர் ஆசிக் குருனியன் பந்தை இலங்கை அணியின் பெனால்டி எல்லை வரை எடுத்துவந்து வேகமாக கோலுக்குள் செலுத்தி, போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

ஏற்கனவே இடம்பெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியைப் போன்று, இந்தப் போட்டியிலும் அணித் தலைவர் சுபாஷ் மதுஷான் ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, மாற்று வீரராக ஹர்ஷ பெர்னாண்டோ உள்வாங்கப்பட்டார்.

தொடர்ந்து 43ஆவது நிமிடம் இலங்கை அணியின் முன்களத்தின் இடது புறத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை சுஜான் சிறந்த முறையில் பாய்ந்து பிடித்தார்.

இரண்டாவது பாதி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே இந்திய அணிக்கான இரண்டாவது கோல் பெறப்பட்டது. லலின்சுவாலா ஷாங்டெ மைதானத்தின் மத்தியில் இடது புற எல்லைக் கோட்டின் ஊடாக பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று பெனால்டி எல்லையை அண்மித்ததும் கோலை நோக்கி உதைந்தார். பந்து எதிர்பாராத விதத்தில் சுஜான் பெரேராவின் தலைக்கு மேலாக வந்து கோலின் ஒரு பக்க மூலையினால் வலைக்குள் சென்றது.

54ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை கவிந்து இஷான் பெற்று முன்னேறி, மீண்டும் அசிகுர் ரஹ்மானுக்கு வழங்க அவர் கோல் நோக்கி உதைந்தார். எனினும் இந்திய கோல் காப்பாளர் அதனை சிறப்பாகப் பற்றிக்கொண்டார்.

ஆட்டத்தின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் மைதானத்தின் மத்தியில் இருந்து நீண்ட தூரம் வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற இந்திய முன்கள வீரர் அதனை பெனால்டி பெட்டியினுள் எடுத்து வந்து கோலுக்குள் உதைந்தார். பந்து இலங்கை கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு மீண்டும் வர மற்றொரு இந்திய வீரர் மீண்டும் பந்தை கோலுக்குள் செலுத்துகையில் இலங்கை பின்கள வீரர்கள் பந்தைத் தடுத்தனர். அதன்போது இந்திய அணியினர் எடுத்த அடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

மீண்டும் 82ஆவது நிமிடத்தில் இலங்கையின் பெனால்டி எல்லைக்குள் வந்து இந்திய வீரர்கள் கோல் நோக்கி உதைந்த பந்தை சுஜான் பெரேரா தட்டி விட்டார்.

மீண்டும் பலம் கொண்ட இந்திய அணியினர் அடுத்தடுத்து இலங்கை அணியின் எல்லையை ஆக்கிரமித்த போதும், கோலுக்காக அவர்கள் எடுத்த இறுதி முயற்சிகள் பயன் கொடுக்கவில்லை.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இலங்கை அணியின் இளம் வீரர் அசேல மதுஷான் பந்தை எடுத்து இந்திய கோல் திசை நோக்கி வேகமாக செல்கையில், எல்லை நடுவர் மூலம் ஓப் சைட் என சைகை காண்பிக்கப்பட்டது.

போட்டியின் இறுதிவரை இலங்கை வீரர்களால் கோல் பெற முயாமல் இருந்தாலும் பலம் கொண்ட இந்திய அணியினருக்கு 2 கோல்களை மாத்திரமே வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் இன்று 7ஆம் திகதி மாலைதீவு அணியை எதிர்த்தாடவுள்ளது.

 


Add new comment

Or log in with...