ஜப்பானில் கடும் சூறாவளி: 10 பேர் பலி: பலத்த சேதம் | தினகரன்

ஜப்பானில் கடும் சூறாவளி: 10 பேர் பலி: பலத்த சேதம்

 

கடந்த 25 ஆண்டிகளில் மிக வலுவானதாகக் கருதப்படும் ஜெபி சூறாவளி, ஜப்பானின் மேற்குப் பகுதியில் பல நகரங்களைச் சூறையாடியதில் குறைந்தது 10 பேர் ஊயிரிழந்து, மேலும் 300 பேர் காயமடைந்தனர்.

நேற்று பகல் ஷிகோகோ தீவில் இந்த சூறாவளி கரையை கடந்தது. பின்னர், இந்த சூறாவளி ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்ஷுவை நோக்கி முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஒசாக்கா தீவில் மூடப்பட்ட கான்சாய் சர்வதேச விமான நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. அதன் ஓடுபாதையில் தொடர்ந்து வெள்ளம் நிரம்பியுள்ளது.

ஒசாக்கா தீவையும் ஜப்பானின் நகர்ப் பகுதிகளையும் இணைக்கும் பாலத்தை எரிவாயுக் கப்பல் ஒன்று சேதப்படுத்தியதால், அந்த வட்டாரத்தில் வீதிகள், ரயில் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருந்த சுமார் மூவாயிரம் பயணிகள், படகு மூலம் கோபி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மிகப் பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளியால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜப்பானிய அரசாங்கம், தற்போது ஜெபி சூறாவளி எச்சரிக்கை நிலையை தளர்த்தியுள்ளது.

‘மிகவும் சக்திவாய்ந்தது’ என்று ஜப்பான் நாட்டின் வானிலை மையத்தால் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்ட ஜெபி சூறாவளி, 1993ஆம் ஆண்டில் ஜப்பானின் முக்கிய தீவுகளை தாக்கி 48 பேர் இறக்க காரணமான சூறாவளிக்குப் பின்னர் சீற்றம் அதிகமுள்ளதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 


Add new comment

Or log in with...