நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய எல்லையற்ற ஜனநாயக சுதந்திரம்! | தினகரன்

நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய எல்லையற்ற ஜனநாயக சுதந்திரம்!

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான கூட்டு எதிரணி அரசாங்கத்திற்கு எதிராக நேற்று மாலை கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தை மையப்படுத்தி நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் பல பிரதேசங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதோடு கடமைக்கு வருகை தந்த ஊழியர்களும் நேற்று பிற்பகல் நேரகாலத்துடன் அலுவலகங்களிலிருந்து வீடு செல்வதற்காகப் புறப்பட்டனர். அவர்களும் போக்குவரத்து சிரமங்களுக்கு பெரிதும் உள்ளாகினர்.

அலுவலக கருமங்கள் பாதிக்கப்பட்டன.வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்பட்டது. மாணவர்களால் பாடசாலைக்கு வர முடியாமல் போனது.அலுவலகத்துக்கு வந்திருந்த ஊழியர்கள் வீடு திரும்ப முடியாமல் திண்டாடினர்.

ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பிலுள்ள பிரதான வீதிகளில் நடத்தப்பட்டதால் பயணிகள் பஸ் வண்டிகள் பேரணிகளுக்குள் சிக்குண்டன. பஸ்களால் நகர முடியாமல் போனது. இதன் விளைவாகவும் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் பொதுமக்களை அசௌகரியங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய ஜனநாயக சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தியபடிதான் நேற்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஜனநாயக உரிமை என்பது ஒருவரின் உரிமையை மறுத்து அல்லது அவ்வுரிமையை மீறி மற்றொருவர் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்வதல்ல. இதற்கு ஜனநாயகம் இடமளிக்குமென எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் அப்பாவிப் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக எதிர்கொண்ட அசௌகரியங்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களது உரிமை மீறலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுவதென்றால் அதற்காக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தவறாகும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அது இடம்பெற்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமானது. ஆனால் இங்கு அந்த நியதி மீறப்பட்டுள்ளது. அதுதான் உண்மை.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக நாட்டுக்கு பொருளாதார ரீதியான நஷ்டமேற்பட்டுள்ளதோடு மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நஷ்டங்களையும் அசெளகரியங்களையும் ஏற்படுத்த அரசு அளித்த ஜனாநாயகம் இடமளித்திருக்கிறது. மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் நடந்து கொண்ட விதம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை அவர்கள் அறிந்திருந்தார்களா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ஏனெனில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேளதாள வாத்தியங்களுடன் ஆடல் பாடல்களுடன் சென்றனர்.

இதுவொரு பொழுதுபோக்கான கேளிக்கை செயற்பாடாகவே நோக்கப்பட்டது. உண்மையில் ஒரு நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதாயின் அந்த நோக்கம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அறிந்து தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிந்திருந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். அதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடையாக கடும் வெயிலில் பல வீதிகளூடாகவும் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தை அடையும் போது இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த கூட்டு எதிரணித் தலைவர்கள் சொகுசு வாகனங்களில் அவர்களது கால்நடை பேரணியை பார்த்து ரசித்தவர்களாக வலம் வந்தனர். இது உண்மையில் தமது அரசியல் நலன்களுக்காக மக்களின் முதுகில் சவாரி செய்யும் ஒரு செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த பதிலின் அடிப்படையில் எவ்வித இடையூறுகளுமின்றி ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று இடம்பெற்று முடிந்திருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் ஜனநாயக உரிமைகளை நாட்டில் மீள உறுதிப்படுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மை நேற்று மீண்டுமொருமுறை தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறு எந்தவொரு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ள இடமளிக்கப்படவில்லை. பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாத அதேநேரம், அவற்றை மீறி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் வெள்ளை வான்கள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். அதற்கும் அப்பால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களுக்கு துப்பாக்கிகள் கொண்டு பதிலளிக்கப்பட்டதோடு பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இவ்வாறான எவ்வித வன்முறையுமின்றி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்து முடிந்தது. இது நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நல்லபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. என்றாலும் மக்களை அசௌகரியங்களுக்குள்ளாகும் வகையில் ஜனநாயகத்தின் போர்வைக்குள் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் குறித்து பொதுமக்கள் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியத் தேவையாகும்.


Add new comment

Or log in with...