20 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிப்பு | தினகரன்

20 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிப்பு

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனியார் உறுப்பினர் சட்டமூலமாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை சபையில் சமர்ப்பித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி ​நேரத்தின் பின்னர் பிரேரணை முன்னறிவித்தலின் போது விஜித ஹேரத் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்தார்.

இதனை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார்.

மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதிக்குப் பதிலாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி முறையொன்றை பரிந்துரைக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை ஜே.வி.பி தயாரித்திருந்தது. இது சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இது நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியானவர் மக்களால் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற விடயத்துக்குப் பதிலாக அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்படுபவராக இருக்க வேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியானவர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என்ற வசனம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலமானது ஐந்து வருடங்களாக இருக்கும், பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்படும் நபர் அவருடைய முதலாவது பதவிக்காலம் நிறைவடைந்தாலே தவிர அந் நபர் பாராளுமன்ற பதவிக்காலம் முடிவடையும்வரை தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலிருந்து நான்கு வாரத்துக்குள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி சாதாரண பெரும்பான்மையுடன் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

உயிரிழத்தல், பதவி விலகல் போன்ற காரணங்களால் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது 4 வாரங்களுக்கு மேற்படாத காலப் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் நபர் ஜனாதிபதிக்கு எஞ்சியிருக்கும் காலப் பகுதியில் அப்பதவியை வகிக்க வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஒரு வாரத்துக்குள் சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டும்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் நபர் அவருடைய பதவிக்காலப் பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியின் பதவியிலோ அல்லது கட்சியின் அங்கத்தவராகவோ இருக்க முடியாது.

இராஜதந்திரிகள், தூதுவர்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதி உள்ளிட்ட நியமனங்களை மேற்கொள்ளும்போதும் அமைச்சரவையின் ஊடாக பரிந்துரைக்கப்படும் நபர்களை ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டும்.

நீதிமன்றம் ஒன்றின் ஊடாக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதாயின் அமைச்சரவையின் அனுமதியுடன் பொதுமன்னிப்பு வழங்க முடியும்.

பாராளுமன்றத்தில் 50 வீதத்துக்கும் அதினமான ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த, பிரதமர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.

பொதுத் தேர்தல் நடைபெற்று அடுத்த பிரதமர் நியமிக்கும்வரை பிரதமர் அவருடைய பதவியில் இருப்பதற்கு தகுதியுடையவராவார்.

ஜனாதிபதி சபாநாயகரை நியமிப்பவராக இருப்பார். பிரதமர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டாலும் அமைச்சரவையில் பிறிதொரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க முடியாது.

அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும் அது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் அந்த அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலே தவிர, தற்பொழுது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நபர் 2020 ஜனவரி 8ஆம் திகதி வரை தனது பதவியில் இருப்பதற்கு உரித்துடையவராவார். அதேநேரம், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் தற்பொழுது பதவியிலிருக்கும் பிரதமர் நடைமுறையிலிருக்கும் சட்டத்துக்கு அமையவே பிரதமராக இருப்பார். 2020 ஜனவரி 9ஆம் திகதி நடைமுறைக்கு வரவேண்டும் எனவும் ஜே.வி.பி சமர்ப்பித்திருக்கும் சட்டமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...