விசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னரே விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் | தினகரன்

விசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னரே விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

 
மேல் மாகாணத்தில் மற்றொரு மேல் நீதிமன்றை அமைக்க நடவடிக்கை

திறைசேரி முறி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னரே விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து தீர்மானிக்க முடியும். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இரு தரப்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னர் அவர்களின் நிலைப்பாடு உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். கேள்வி நேரத்தில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டரீதியான ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை சட்ட மாஅதிபர் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆகியோர் பரிந்துரைப்பர். இந்தப் பரிந்துரை பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டு விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது பற்றி தீர்மானிக்கப்படும் என்றார். அது மாத்திரமன்றி பேர்ப்பச்சுவல் அது மாத்திரமன்றி பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 11 பில்லியன் ரூபாஇடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை குறுகிய காலத்துக்குள் அறவிட்டுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சட்ட மாஅதிபரிடம் கோரியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி மத்திய வங்கியின் ஆளுநராகவிருந்த அர்ஜூன் மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் அவருடன் தான் எந்தத் தொடர்புகளையும் பேணவில்லையென்றும் கூறினார்.

தொடர்ந்தும் பதிலளித்த பிரதமர், மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள மேல் மாகாணத்தில் விசேட மேல்நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மற்றுமொரு மேல் நீதிமன்றத்தை மேல்மாகாணத்தில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை இந்த விசேட மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியத்தை மோசடியாகப் பயன்படுத்தி ஹம்பாந்தோட்டையில் நினைவுத் தூபி அமைத்தமை பற்றிய வழக்கும், லிட்ரோ காஸ் நிறுவனத்தின் நிதியை மோசடியாகப் பயன்படுத்தியமை குறித்த வழக்கும் இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்ட மாஅதிபரினால் அல்லது இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி அதன் பணிப்பாளர் நாயகத்தால் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஏதாவது குற்றமொன்றுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து பிரதம நீதியரசரின் அனுமதியுடன் தீர்மானிக்க முடியும். விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நடைமுறை இதுவாகும். அரசியல் ரீதியான காரணங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படாது.

திறைசேரிமுறி விநியோக சர்ச்சை தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்மானிக்கும் பொருட்டு சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களான சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பது தற்பொழுது உள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும்.

திறைசேரிமுறி விநியோக சர்ச்சை குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் இலஞ்ச , ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் பிரதம நீதியரசருக்குத் தீர்மானிக்க முடியும். சட்டத்துறையில் நாம் அழுத்தம் கொடுப்பதில்லை.

திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை பூர்த்திசெய்தவுடன் சட்ட மாஅதிபருக்கும், இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கும் தமது முடிவுகளை உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும். விசாரணைகள் முடிந்த பின்னரே சட்ட நடவடிக்கை தொடர்பிலோ அல்லது விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது பற்றியோ தீர்மானிக்கப்படும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 11 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. இது நஷ்டத்தைவிட அதிகமாகும். இந்தப் பணத்தை குறுகிய காலத்துக்குள் அறவிட்டுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சட்ட மா அதிபரிடம் கோரியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

விசேடமாக அர்ஜூன் மகேந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட எனையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருக்கின்றவராயின் அவரை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அது குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் இலங்கையிலிருந்து சென்ற பின்னர் அவருடன் எந்தவிதமான தொடர்பையும் நான் கொண்டிருக்கவில்லை. சட்டத்தரணிகள் எனக்கு அது தொடர்பில் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...