விழத் தொடங்கியது விக்கட்! | தினகரன்

விழத் தொடங்கியது விக்கட்!

ஒரு இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற கூறிய பேரணி... தன் பலத்தை நிரூபிப்பேன் என்று சூளுரைத்த பேரணி...

ஆனால் இதெல்லாம் நடக்குமா,நடக்காதா என்பதுதான் தெரியவில்லை. அதற்கான அறிகுறி ஒன்றையும் அழகிரி தரப்பில் நேற்று வரை காண முடியவில்லை.

தன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற அழகிரியின் மிரட்டல் தொனி மறைந்துபோய்... தன்னை சேர்த்துக் கொண்டால் தி.மு.க தலைவரை ஏற்பேன் என்று கீழே இறங்கி வந்து குரல் கொடுத்தாகியும் விட்டது.

ஆனாலும் அழகிரியின் மிரட்டலையும் சரி,தாழ்ந்து போனதையும் சரி எதையுமே தி.மு.க தலைமை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் கூட அழகிரி சொன்ன வார்த்தைகளைப் பற்றி இப்போதுவரை சிந்தித்து பார்க்கக் கூட ஸ்டாலின் விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது. அழகிரி இப்படி மிரட்டப் போய் தனக்குத்தானே ஆப்பும் வைத்துக் கொண்டார்.

இந்த மிரட்டலால் உஷாரான தி.மு.க தலைமை, அழகிரி ஆதரவாளர்களை தேடிப் போய் பேசி தங்களுடன் இணைத்து கொண்டது. இதுதான் அழகிரிக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி!

அழகிரி ஆதரவாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் தி.மு.கவில் மீண்டும் இணைந்து விட்டார்களே, பிறகு எப்படி அழகிரியால் பேரணி நடத்த முடியும் என்ற சந்தேகம் அனைத்து தரப்பிலும் எழுந்தது.

ஆனால் ஆதரவாளர்கள் இணைந்த பிறகும், அப்போதும் அழகிரி, "ஒரு இலட்சம் பேரை திரட்டுவேன் " என்று மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை உறுதிபடத் தெரிவித்து வந்தார். இன்றுதான் தன்னுடைய எதிர்காலத்தையே நிர்ணயிக்க போகும் நாள் என்பதால், அழகிரி மறைமுகமாக தி.மு.க ஆதரவாளர்களையும், அதிருப்தியாளர்களையும் நேற்றும் மறைமுகமாக திரட்டிக் கொண்டுதான் இருந்தார். பேரணி நடத்த காவல்துறையிடமும் முறையான அனுமதியும் ஏற்கனவே கேட்டிருந்தார்.

இந்நிலையில்தான், நேற்றுக் காலை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக ரவியை தி.மு.க நீக்கம் செய்த சம்பவம் நடந்தது. ரவியை நீக்கம் செய்ததால் ரவிக்கு எவ்வளவு அதிர்ச்சி இருக்குமோ தெரியாது, ஆனால் அழகிரிக்கு இது இரண்டாவது அதிர்ச்சி.

இன்று ஒரு இலட்சம் பேரையோ அல்லது அதற்கு குறைவான ஆட்களையோ திரட்டிக் கொண்டு பேரணி நடத்த போகிறார் என்றே வைத்து கொள்வோம். அதில் கலந்து கொள்பவர்கள் யாராக இருக்கும்? எல்லோருமே தி.மு.க-வை சார்ந்தவர்களாகத்தானே இருப்பார்கள்? இன்னும் சொல்லப் போனால் அழகிரிக்காக வருகிறார்களோ இல்லையோ மூத்த தலைவர் கருணாநிதியின் மேல் உள்ள பற்றுக்காகவாவது இந்த பேரணியில் கலந்து கொள்ள வருவார்கள்தானே?அப்படியென்றால், அவர்கள் அனைவர் மீதும் தி.மு.க தலைமை நடவடிக்கை ஏதாவது எடுக்க வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அழகிரியை வரவேற்கப் போன ரவிக்கே இந்த நிலைமை என்றால், பேரணியில் கலந்து கொண்டால் நம் நிலைமை என்னாகுமோ, நம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்று தி.மு.க நிர்வாகிகள் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர்.

ரவியை நீக்கியதன் மூலம் அழகிரியிடம் தன் தரப்பிலான எதிர்ப்பை இன்னும் ஆழமாகவே பதித்துள்ளது தி.மு.க தலைமை. என்றாலும் "கருணாநிதியின் மகன் சொன்னதை செய்வேன்" என்று ஏற்கனவே கூறியுள்ளார் அழகிரி. எதற்கும் இன்று நிலைமை தெரிந்து விடும்.


Add new comment

Or log in with...