ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு துப்பாக்கியால் பதிலளித்த கோட்டா இன்று அழைப்பு விடுக்கிறார்

 

கோட்டாவின் செயல் வேடிக்கையானது என அமைச்சர் ராஜித்த சாடல்

கடந்த அரசாங்க காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் பதில் கொடுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இன்று நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குச் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அழைப்புவிடுப்பது வேடிக்கையாகவுள்ளதென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வெல பிரதேசத்தில் தண்ணீர் கேட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வேட்டு நடத்தியமை, மீனவர் ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிக் குண்டுகள் மூலம் பதில் கொடுத்தமை போன்றவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுடனேயே இடம்பெற்றுள்ளன.

அத்தகையதொரு பின்னணியில் உள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர், இன்று கொழும்பில் கூட்டு எதிரணி நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை அழைப்பது வெட்கக்கேடான விடயம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு வெட்கமில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கூட்டு எதிரணி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்தகையதொரு சந்தர்ப்பத்திலே சட்டத்திற்கு பயந்தவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இதை பொதுமக்கள் மறந்துவிடப்போவதில்லை.

மக்கள் இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த நல்லாட்சி அரசாங்கத்துடனேயே உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் மனிதப் படுகொலைகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டியவற்றை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...