ஆலயத்தின் மதில் எல்லைவரை நிலப்பகுதியை உள்வாங்கியது கடல்! | தினகரன்

ஆலயத்தின் மதில் எல்லைவரை நிலப்பகுதியை உள்வாங்கியது கடல்!

திருக்கோவிலில் தீவிர கடலரிப்பினால் பெரும் சேதங்கள்

 

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய கடலைகள் எழுந்து ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கொங்றீட் வீதிகள் உடைக்கப்பட்டுள்ளன.இங்கு தொடர்ந்து அலைகள் எழுவதுடன் மண் அரிப்பும் இடம்பெற்றுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, ஆலயத்திற்கு முன்னால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் முருகன் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பார்வையிட்டதுடன் உடனடியாக கடலைகள் மேலும் ஊருக்குள் உள்புகுவதை கட்டுப்படுத்தும் வகையில் அவசர நடவடிக்கையாக சுமார் 500 மணல் மூடைகளை இடுவதற்காக திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால்,இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்கள் உடனடியாக நகர்த்தப்பட்டதுடன் மீனவர்களின் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கரையோரமாக இருந்த தென்னை மரங்கள் சரிந்து கடலுக்குள் விழுந்துள்ளதுடன் கரையோரமாக இருந்த கிணறு ஒன்று கடலக்கு இருப்பது போல் காணப்படுகிறது. இன்னும் சுமார் 10அடி தூரத்திற்கு கடலைகள் உள்ளே வருமானால் வரலாற்று பழைமை மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன் மதில் மற்றும் நுழைவாயில் என்பனவும் சேதமடையக்கூடும் என்ற அச்சம் எற்பட்டுள்ளது.

 திருக்கோவில் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...