எந்த சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் இருக்க வேண்டும் | தினகரன்

எந்த சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் இருக்க வேண்டும்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க

உலகில் எந்தவொரு நாட்டிலும் அவசர தேவைகளின் போது பாதுகாப்புப்படையினரே முன்னணியில் இருந்து செயற்படுகின்றனர். இதனால் எந்தவொரு சவால்களுக்கும் முகம் கொடுக்க தயார் நிலையில் பாதுகாப்பு படையினர் இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் 8ஆவது வருடமாக தொடர்ச்சியாக நடத்திவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு துறைசார் நிபுணர்கள் பங்குகொள்ளும் 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2018' சர்வதேச மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

இராணுவ தளபதி மேலும் குறிப்பிடுகையில் :-

உலகில் வாழும் அனைத்து இன மக்களுக்கிடையில் பாதுகாப்பு மற்றும் அது தொடர்புபட்டதாக எழும் சவால்கள் தொடர்பிலான தெளிவினை மேலும் விரிவாக்க இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறான விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவ பரிமாற்றங்கள் மூலம் துரைசார் அறிவை மேலும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் இது தொடர்பிலான சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக ஆராய முடிகின்றது.

உலகில் எந்தவொரு நாட்டிலும் அவசர தேவைகளின் போது பாதுகாப்புப்படையினரே முன்னணியில் இருந்து செயற்படுகின்றனர். எனவே இந்த மாநாடு பாதுகாப்பு தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் ஒரு மேடையாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...