தட்டிக்கழிக்காமல் அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன் | தினகரன்

தட்டிக்கழிக்காமல் அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன்

வங்கிகளில் கடன் வழங்கும் செயற்பாடுகளைத் தட்டிக்கழிப்பதற்கே முன்னுரிமையளிக்கப்பட்ட நிலைமையை மாற்றி, அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களுக்கு முக்கியமளிக்கப்பட்டுள்ளதென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் முதல் வருடத்திலேயே ஒரு இலட்சம் பேருக்கு கடன் வழங்கி அவர்களைத் தொழில் முயற்சியாளர்களாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். பல கடன் திட்டங்களுக்கு மிகக் குறைந்த வட்டியும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 15 இலட்ச ரூபாவுக்கும், ஊடகவியலாளர்களுக்கான மூன்று இலட்ச ரூபாவுக்கும் வட்டி அறவிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கான வட்டியை அரசாங்கமே செலுத்தும் என்றும் தெரிவித்தார்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி மேடையில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

ஊவா வெல்லஸ்ஸவில் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான புரட்சி 200 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருநூறு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ஊவா வெல்லஸ்ஸவில் அபிவிருத்திப் புரட்சி நடைபெறுகிறது.

நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குக் கைகொடுக்கும் பாரிய கருத்திட்டமான ‘என்டர​பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி முதன் முறையாக மொனராகலையில் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம், மூன்றாம் கண்காட்சிகள் விரைவில் அநுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் கண்காட்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா”வோடு இணைந்த செயல்திட்டமான ‘கம்பெரலிய’ மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை அபிவிருத்திக்குள்ளாக்கும் இத்திட்டத்திற்கென ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு 200 மில்லியன் ரூபா வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த வரவு - செலவு திட்டத்தில் இந்த நிதி மேலும் அதிகரிக்கப்படும்.

மொனராகலை மாவட்ட மக்களில் 25,000 குடும்பங்களுக்கு மலசலகூடம் போன்ற பொதுவசதிகள் கிடையாது. அதனை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த வருடத்தில் 50 கோடி ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது. மேலும் பல செயல்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுவதுடன் மத வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்புக்கும் நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கடன் வழங்கும் திட்டம் முன்னொருபோதுமில்லாதவாறு சிறந்த திட்டமாகும். கடந்த காலங்களில் வங்கிகளில் கடன்கள் வழங்காமல் தட்டிக்கழிப்பதற்கே முன்னரிமையளிக்கப்பட்டது. ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கடன் திட்டம் அதிலிருந்து முற்றாக மாறுபட்டது. அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதே அதன் நோக்கம்.

அதற்கென வங்கிகளில் தனிப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. முதல் வருடத்திலேயே ஒரு இலட்சம் பேருக்கு கடன் வழங்கி அவர்களை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். (ஸ)

மொனராகலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...