பொதுச் சேவைகள் மக்களை சென்றடைவதில் தடங்கல்கள் | தினகரன்

பொதுச் சேவைகள் மக்களை சென்றடைவதில் தடங்கல்கள்

மனித வாழ்வியல் கட்டமைப்பில் தேவைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொதுச் சேவைகளின் தேவைப்பாடுகளில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

வறிய மக்களுக்கு பொதுச்சேவைகளின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. பொதுச்சேவைகள் எனும்போது ஒரு நாட்டினை நிர்வகிக்கின்ற தரப்பினால் அந்நாட்டு பிரஜைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் சேவைகளாகும்.

பொதுச்சேவைகளின் முக்கியத்துவத்தை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, பொதுமக்களுக்கு இலசமாக வழங்கப்படுகின்ற பொதுச் சேவைகள் எந்தளவுக்கு நேர்த்தியாக மக்களைச் சென்றடைகின்றன என்ற கேள்விகளும் உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரை கிராம மட்டங்களிலான பொதுச் சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி மன்றங்களே காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் தரப்பினல் இந்தப் பொதுச்சேவைகளை இலவசமாகத்தான் வழங்குகின்றார்களா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.

மறுபக்கத்தில் அரசியல் ஆயுதங்களாக பொதுச்சேவைகள் கையாளப்படும் நிலையில், தமக்குக் கிடைக்க வேண்டிய பொதுச்சேவைகள் பற்றி மக்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பதை அறிவதற்கு நாம் முற்பட்டோம். பொதுச்சேவைகளின் தரத்தை அறிவதற்கு பல்வேறு அளவீடுகளும் காணப்படுகின்றன.

இந்த அளவீடுகள் மூலம் உரிய நேரத்தில், உரிய முறையில், உரிய தரத்தில் பொதுச்சேவைகள் வழங்கப்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த அளவீடுகளில் ஒன்றாக குடிமக்கள் மதிப்பீட்டு அட்டை அல்லது குடிமக்கள் அறிக்கை அட்டை காணப்படுகிறது. பொதுச்சேவைகளின் பயனாளிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது சமூகப் பொறுப்புடைமை சார்ந்த எளிமையான மற்றும் வினைத்திறனான ஆய்வுக் கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்சேவைகளால் பயனடையும் தரப்பினரினால் வழங்கப்படும் தகவல்களைக் கொண்டு நெறிமுறையாக தயாரிக்கப்படும் இந்த ஆய்வறிக்கையானது சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆய்வுமுறையைப் பயன்படுத்தி இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையம் (Centre for Poverty Analysis - CEPA) முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுச் சேவைகள் பற்றிய ஆய்வொன்றை நடத்தியிருந்தது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆய்வுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பொதுச் சேவைகளின் தரம் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்களை கண்டறிய முடிந்தது.

மக்களினால் பெற்றுக் கொள்ளப்படுகிற பொதுச் சேவைகள் மற்றும் அவற்றின் தரம் தொடர்பான திருப்தித் தன்மை, பொதுச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன. ஆய்வின்போது மக்கள் வழங்கிய பதில்கள் மூலம் பொதுச் சேவைகள் குறித்த அவலங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

குடிமக்கள் அறிக்கை அட்டையைக் கொண்டு நடத்திய ஆய்வில் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. குடிநீர், வீதிக் கட்டமைப்பு, வீதிவிளக்குகள், வடிகாலமைப்பு, கழிவகற்றல், விளையாட்டு மைதானம், நூலகம், சிறுவர் பூங்கா போன்ற பொதுச் சேவைகள் பிரதேச சபைகளினால் வழங்கப்பட வேண்டியவை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள இருபது கிராம அலுவலர் பிரிவுகளிலே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஐயங்கேணி, மீராக்கேணி, மிச்நகர் ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் கிரான் கிழக்கு, கோரகல்லிமடு, தேவபுரம், திகிலிவெட்டை, வாகனேரி போன்ற ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அரசடித்தீவு வடக்கு, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு தெற்கு, முனைக்காடு வடக்கு, முனைக்காடு மேற்கு என்கிற ஆறு கிராம அலுவலர் பிரிவுகளும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கணேசபுரம், கோவில்போரதீவு மேற்கு, மாவேற்குடா, செல்வபுரம், சின்னவத்தை மற்றும் வன்னிநகர் என்கிற ஆறு கிராம அலுவலர் பிரிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதேபோல முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் வற்றாப்பளை, கள்ளப்பாடு தெற்கு, செல்வபுரம், மாமுனை, கேப்பாபிலவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, சிலாவத்தை, முள்ளியவளை வடக்கு, முல்லைதீவு தெற்கு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் முத்தையன்கட்டுக்குளம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், வித்தியாபுரம், மாங்குளம், திருமுறிகண்டி, இந்துபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் நிக்கவௌ தெற்கு, ஜனகபுரம், கிரிபன்வௌ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் மொத்தமாக இருபது கிராம அலுவலர் பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் போது சில பொதுச்சேவைகளை மக்களால் சிரமமின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதும், பெற்றுக் கொள்ளப்படுகிற சேவைகளைப் பற்றிய திருப்தியின் அடிப்படையில் அவற்றின் தரத்தை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

குடிநீர் என்கிற பொதுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை பிரதேச சபைகளுக்குரியது. ஆய்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்த போதும், வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தியைக் காண முடியவில்லை. குறிப்பாக வன்னிநகர், மவேற்குடா, கோவில்போரதீவு மேற்கு, தேவபுரம், முனைக்காடு வடக்கு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பற்றி மக்களுக்கு இருக்கும் திருப்தியானது மிக மிகக் குறைவு என்றே கூறமுடியும். குடிநீருக்கான தேவை இருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் இதுவரை அத்தேவை நிவர்த்தி செய்யப்படவில்லையென 30 சதவீதமான மக்கள் குறிப்பிடுகின்றனர்.

முல்லைத்தீவில் ஜனகபுரம், நிக்கவௌ தெற்கு, வற்றாப்பளை, செல்வபுரம், முள்ளியவளை வடக்கு, முல்லைதீவு தெற்கு, மாமுலை, ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளில் குடிநீர் வசதியானது மிகவும் குறைவாகவே உள்ளது.

வீதிக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் பல பிரதேசங்களிலுள்ள பாதைகள் புழுதி கிளப்பும் கிரவல் பாதைகளாகவே காணப்படுகின்றன. வடமாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கிலும் இந்த கிரவல் வீதிகளை அதிகமாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது.

முத்தையன்கட்டுக்குளம், முள்ளியவளை வடக்கு, திருமுறிகண்டி ஆகிய பிரதேசங்களிலும் வீதிகளின் தரம் குறைவாகவே உள்ளது. மட்டக்களப்பில் மவேற்குடா, கணேசபுரம், வன்னிநகர், வாகனேரி, செல்வபுரம், கிரான் கிழக்கு, கோரகல்லிமடு, அரசடித்தீவு வடக்கு, திகிலிவெட்டை, முனைக்காடு மேற்கு, தேவபுரம், முனைக்காடு வடக்கு மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் தேவைக்கு ஏற்ற வகையில் வீதிக் கட்டமைப்பு காணப்படவில்லை.

மழை காலங்களில் இந்த வீதிகளைப் பயன்படுத்த முடியாதுள்ளது.

2016ஆம் ஆண்டில் குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்புக்கு அமைய இலங்கையில் பொதுவாக வறுமை 4.1% ஆகவும், நகரப்புறத்தில் வறுமை 1.9% ஆகவும், கிராமப்புறங்களில் 4.3% ஆகவும் உள்ளன. வடமாகாணத்தில் மொத்தமாக வறுமையின் அளவு 7.7% ஆகவும் கிழக்கில் 7.3% ஆகவும் உள்ளது. நாங்கள் ஆய்வை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமையின் அளவு 12.7% ஆகவும் மட்டக்களப்பில் 11.3% ஆகவும் உள்ளது.

மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவும், மூற்றாவது இடத்தில் மட்டக்களப்பும் உள்ளன.

அனுஷா சிவலிங்கம்
வறுமை ஆராய்ச்சி
நிலையம் (CEPA)


Add new comment

Or log in with...