வீடுகளை கட்டுவது எந்த நாடு என்பது அவசியமில்லை | தினகரன்

வீடுகளை கட்டுவது எந்த நாடு என்பது அவசியமில்லை

வீடுகளை கட்டுவது இந்தியாவா? சீனாவா? ஜப்பானா? அவசியமில்லை. யார் கட்டினால் என்ன? மக்களுக்கு வீடு கட்டப்பட வேண்டும் என்பதே எனது நோக்கமென மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றுத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா கட்டினால் என்ன? சீனா

கட்டினால் என்ன? ஜப்பான் வந்து கட்டினால் என்ன? எங்களுக்குத் தேவை வீடு கட்டப்பட வேண்டும் என்பதே. என்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சிக்கு நேற்று (29) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வீட்டுத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பில் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும். அது பிரதமரின் வீட்டுத் திட்டம். எனக்குத் தரப்பட்ட வீட்டுத்திட்டத்தை நான் உரியமுறையில் செய்து வருகிறேன் எனத்தெரிவித்த அவர், மூன்று வருடங்களாக யார் வீடுகளை கட்டுவது ? என்பது தொடர்பில் பேசிப் பேசி ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான் என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...