தேர்தலை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் இலக்கு | தினகரன்

தேர்தலை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் இலக்கு

பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்

பதவிக்காலம் முடிவடைந்த மற்றும் முடிவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தேவையாகவுள்ளதென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டினார்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு சுமார் 11 மாதங்கள் கடந்துள்ளன.

சட்டரீதியான ஏற்புத் தன்மை இல்லாத சட்டத்துக்கே சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில் நோக்கும்போது மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்பதற்கான செயற்பாடுகளே கடந்த 12 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

அரசாங்கம் 3 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான யோசனையை கொண்டு வந்திருந்தது. இதன்போது பெண்கள் பிரதி நிதித்துவம் தொடர்பான திருத்தத்தை கொண்டு வந்து தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் 3 மாகாண சபைகள் காலாவதியாக 9 மாதங்கள் முடிந்து விட்டன. மற்றைய சபைகளின் காலமும் முடியவுள்ளது. அவற்றின் தேர்தலும் ஒத்தி வைக்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது. எல்லை நிர்ணய அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அது தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படவில்லை. தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கத்திலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...