வயிற்றிலிருந்து 153 கொக்கைன் உருண்டைகள் மீட்பு (UPDATE) | தினகரன்

வயிற்றிலிருந்து 153 கொக்கைன் உருண்டைகள் மீட்பு (UPDATE)

கொக்கேனுடன் பிரேசில் நாட்டு இளைஞர்கள் கைது-2 Brazilian Arrested-Concealing Cocaine Capsules

ரூபா 3 1/2 கோடி பெறுமதி

இலங்கை வந்த இரு பிரேசில் நாட்டவரின் வயிற்றிலிருந்து பொதியிடப்பட்ட 153 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (30) மற்றும் நேற்று (01) ஆகிய இரு தினங்களில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நேற்று முன்தினம் கைதான 30 வயது நபரின் வயிற்றிலிருந்து மொத்தமாக 88 கொக்கேன் உருண்டைகளும், நேற்று (01) கைதான 24 வயது நபரின் வயிற்றிலிருந்து 65 கொக்கேன் உருண்டைகளும் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மொத்தமாக 1.4 கிலோ கிராம் (1,400 கிராம்) கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி ரூபா 35 மில்லியன்கள் (ரூபா 3.5 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கொக்கைன் உருண்டைகளை விழுங்கிய பிரேசில் நாட்டவர்கள் இருவர் கைது

கொக்கேன் (Cocaine) போதைப்பொருளுடன் வந்த பிரேசில் நாட்டைச்சேர்ந்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (30) 30 வயதான நபர் ஒருவரும், இன்றைய தினம் 24 வயதான நபர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் பிரேசிலிலிருந்து கட்டார் (டோஹா) வழியாக கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் 30 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் உடலின் ஸ்கேன் படம் மூலம் அவரது வயிற்றில் உருண்டைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கும் இரகசிய தகவல் கிடைத்ததால் அவர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர், பொலிசாரால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்து 26 பொதி செய்யப்பட்ட சிறு கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன் பின்னர், குறித்த சந்தேகநபரிடமிருந்து இவ்வாறான மேலும் 40 கொக்கேன் உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த சந்தேகநபரிடமிருந்து 66 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 500 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி ரூபா 1 கோடி 40 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை இன்று (01) காலை கட்டாரின் (டோஹா) வழியாக பிரேசிலிலிருந்து மற்றுமொரு விமானத்தில் வந்த 24 வயமு சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கொண்ட உருண்டைகளை விழுங்கிய நிலையில் வந்தமை தெரிய வந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபரின் வயிற்றில் சுமார் 100 போதைப்பொருள் உருண்டைகள் இவ்வாறு காணப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் ரூபா ஒன்றரை கோடியாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பிலும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்திருந்தமையால் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இருவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பெருள் தடுப்புப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...