3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில்

3rd Test: இலங்கைக்கு 63 ஓட். அவசியம்; குசல் பெரேரா வைத்தியசாலையில்-3rd Test-Day03-Stumps-SLvWI-Kusal Perera Injured

 

மூன்றாம் நாளில் 20 விக்கெட்டுகள் இழப்பு

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 63 ஓட்டங்கள் அவசியமாகும்.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் இந்த டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நேற்றுமுன்தினம் (25) 5 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்து தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

நிரோஷன் திக்வெல்ல ஆகக் கூடுதலாக 42 ஓட்டங்களை பெற்றதோடு, தனுஷ்க குணதிலக 29 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ஷனொன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியை விட 50 ஓட்டங்கள் முன்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவ்வணி சார்பில் ஆகக் கூடுதலாக பந்துவீச்சாளர் கெமர் ரோச் 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குசல் பெரேரா உபாதை
இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குசல் பெரேரா, குறித்த இன்னிங்ஸின் 29 ஓவர் பந்துவீசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்தின் எல்லையில் வைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி விக்கெட்டுக்கான (82/9) பிடியெடுப்பை மேற்கொள்ள முயற்சித்த வேளையில், கீழே வீழ்ந்து உபாதைக்குள்ளானார்.

மைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் வீழ்ந்த அவர், விளம்பர பலகையில் வீழ்ந்து பலத்த பாதிப்பிற்குள்ளான நிலையில், அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டதையடுத்து, அவர் பலத்த பாதிப்புக்கு உள்ளாகவில்லை என தெரியவந்துள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்தார். ஆயினும் இன்றைய (26) ஆட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்க முடியவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.

அதற்கமைய நேற்றைய (25) மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணிகள் சார்பிலும் மொத்தமாக 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 25* ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்று (26) போட்டியின் நான்காம் நாள் என்பதோடு, இலங்கை அணி வெற்றி பெற, 5 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் இன்னும் 63 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.

ஏற்கனவே இத்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி, 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியை வெற்றி பெறுவதன் மூலம், இலங்கை அணிக்கு இத்தொடரை சமத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ்
மேற்கிந்திய தீவுகள் 204/10 (69.3)

ஜேசன் ஹோல்டர் 74 (123)
ஷேன் டோவ்ரிச் 71 (132)

லஹிரு குமார 4/58
கசுன் ராஜித 3/68

இலங்கை 154/10 (59.0)
நிரோஷன் திக்வெல்ல 42 (72)*
தனுஷ்க குணதிலக 29 (73)
குசல் பெரேரா 22 (59)

ஷனொன் கேப்ரியல் 3/52
ஜேசன் ஹோல்டர் 4/19

இரண்டாம் இன்னிங்ஸ்
மேற்கிந்திய தீவுகள் 93/10 (31.2)

கெமர் ரோச் 23 (37)
ஷேன் டோவ்ரிச் 16 (31)

இலங்கை 81/5* (24.0)
குசல் மெண்டிஸ் 25 (38)
தனுஷ்க குணதிலக 21 (30)

ஜேசன் ஹோல்டர் 4/21
கெமர் ரோச் 1/21

(குறித்த போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகி - அடுத்த நாள் காலை 7.00 மணிக்கு நிறைவடைகின்றது)

 


Add new comment

Or log in with...