உடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு | தினகரன்

உடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு

சென்னை அண்ணாநகரில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து விலை உயர்ந்த கையடக்கத்தொலைபேசியை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

‘ரேனிகுண்டா’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்க். இவர் ‘அஞ்சான்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சஞ்சனா சிங்க் தினந்தோறும் அதிகாலையில் சைக்கிள் சவாரி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோல சனிக்கிழமை அதிகாலையும் வழக்கம்போல் அவர் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவு செய்த அவர், தனது விலையுயர்ந்த கையடக்கத்தொலைபேசியில் வழிகாட்டும் மேப் செயலியை கையில் வைத்து பார்த்தபடியே சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அண்ணா நகர் சிந்தாமணி சிக்னல் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங்க் கையில் இருந்த அவரது விலை உயர்ந்த கையடக்கத்தொலைபேசியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா கொள்ளையனை தனது சைக்கிளில் வேகமாக விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார்.

ஆனால் அவரால் முடியாமல் சிறிது தூரம் விரட்டிச் சென்று நின்று விட்டார். பின்னர் இதுகுறித்து அண்ணா நகர் பொலிஸில் சஞ்சனா சிங்க் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளை வைத்து கையடக்கத்தொலைபேசி கொள்ளையனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Add new comment

Or log in with...