வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் மஹிந்தவை பிரதமராக்கும்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு குருணாகலில் போட்டியிடுவதால் ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்களால் அவருக்கு வாக்களிக்க முடியாது என பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட ஐ. ம.சு. மு அரசாங்கத்தை அமைக்க வழங்கும் வாக்குகளாகும் என ஐ. ம. சு. மு ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், ஐ. ம.சு. மு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புகைப்படத்தை நாம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது.

ஜனாதிபதியின் அனுமதியுடன் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தினால் அது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அவர் நடுநிலை வகிப்பதாக கூறியதாலே அவரின் படத்தை பிரசாரங்களுக்கு பயன்படுத்தவில்லை. ஆனால் ஐ. தே. க அவரின் படத்தை பயன்படுத்தியதால் எமக்குள்ள உரிமையாக கருதி நாமும் அதை பயன்படுத்தினோம்.

பாதாள உலகம் குறித்த தகவல் எனக்கு இருப்பதாக கூறி என்னை விரைவில் உள்ளே தள்ளுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியிருக்கிறார். என்னை சிறையில் போட்டாலும் எனது குரலை முடக்க முடியாது. மத்திய நெடுஞ்சாலை மோசடி குறித்து பேசியதால் டிலான் பெரேரா திருடனாகிவிட்டான். நான் திருடியிருந்தால் 18 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணை நடத்த முடியும். 14 ஆம் திகதி வரை எனக்கு கட்சி சார்பில் ஆற்றுவதற்கு, வேலையிருக்கிறது. அதனால் அதுவரை எனக்கு வர முடியாது. அச்சுறுத்தல்களுக்கு பயந்து நான் வாய்மூடமாட்டேன் என்றார். 

 


Add new comment

Or log in with...