சந்த்யா எக்னலிகொட தொடர்பான வழக்கின் தண்டனை நாளை
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகமான, கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்திலுள்ள சமய தலம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குறித்த 13 பேரும் குற்றவாளி அல்ல என, தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், குறித்த தீர்ப்பை மீள்பரிசிலனை செய்யும் வகையில், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, இன்றைய தினம் (23) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வேங்கப்புலி முன்னிலையில் இன்று (13) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்ததற்கு அமைய, நாளைய தினம் (14) அதற்கான தண்டனை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்த்யா எக்னலிகொட தொடர்பான குறித்த வழக்கு, கடந்த மே 24 ஆம் திகதி, ஹோமாகம நீதவான் நீதிமன்றில், நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment