கார் மீது சூடு பொய்ச் சம்பவம்; சைட்டம் CEO சமீர கைது

கார் மீது சூடு பொய்ச் சம்பவம்; சைட்டம் CEO சமீர கைது; ஜூன் 14 வரை விளக்கமறியல்-SAITM CEO Sameera Senaratne Arrested-Remanded-Jun 14

 

ஜூன் 14 வரை விளக்கமறியல் விதிப்பு

சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் சமீர சேனாரத்ன, பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர், கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம், பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு, சைட்டம் நிறுவனத்திலிருந்து தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முற்பட்ட வேளையிலேயே தன்னை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும், தனது காரின் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக அவர் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு தலையையும் மூடும் வகையிலான தலைக்கவசம் அணிந்த இருவர்,  அவரது வாகனத்தை நோக்கி சராமரியாக துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்ததோடு, குறித்த சந்தர்ப்பத்தில் தான், வாகன இருக்கைக்கு அடியில் பதுங்கியதால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம், திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காண்பிப்பதற்காகவே குறித்த சம்பவத்தை அவர் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர், டொக்டர் சமீர சேனாரத்னவை இதற்கு முன்னரும் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த வருடம் பெப்பரவரி 27 ஆம் திகதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 9 மி.மீ. வகையான கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களும் மீட்கப்பட்டதோடு, குறித்த குற்றத்தை மேற்கொள்ளவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிசார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை திட்டமிடுவதில், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் மாகாண சபையில் கடமைபுரியும் சாரதி ஒருவருக்கும் சம்பந்தமிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...