நடிகையர் திலகத்தில் என் அப்பா தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார்

 நடிகையர் திலகம் திரைப்படத்தில் என் அப்பா ஜெமினி தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார் என டொக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் ‘மகா நடி’ என்ற பெயரில் மே 9 ஆம் திகதி வெளியாகி ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பரவலான பாராட்டுகளையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சில விமர்சனங்களையும் சம்பாதித்து வருகிறது.

வாழ்க்கைச் சித்திரம் என்று அறிவித்து விட்டு நடிகர் ஜெமினி கணேசனுடனும் சாவித்ரியுடன் நெருங்கிப் பழகிய நடிகர், நடிகைகளுடன் கலந்து பேசி அவர்களைப் பற்றிய மேலும் சில நுணுக்கமான விவரங்களைத் தெரிந்து கொண்டு அதையும் படத்தில் இயக்குனர் நாக் அஷ்வின் பயன்படுத்தி இருக்கலாம்.

இப்போது வெளிவந்துள்ள திரைக்கதையில் சாவித்ரியை கொண்டாடுவதெல்லாம் சரி தான். ஆனால் அதற்காக ஜெமினி கணேசன்தான் அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தார் என்றும் ஜெமினியின் மூன்று மனைவிகளில் அவருக்கு சாவித்ரியின் மீதிருந்தது மட்டுமே காதல் என்றும் மற்ற இரு மனைவிகளில் முதல் மனைவி பாப்ஜியைத் திருமணம் செய்து கொண்டது சூழ்நிலை காரணமாக என்றும் புஷ்பவள்ளியைத் திருமணம் செய்து கொண்டது அவருக்கு பெண்களின் மீதிருந்த மோகத்தின் காரணமான சந்தர்பவசத்தால் என்பது மாதிரி காட்சிகளையும் வசனங்களையும் சித்தரித்திருந்தது தவறு என்பது போன்றும் சில குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

'அப்பா, சாவித்ரி அம்மாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நானும் என் அக்காவும் பிறந்து விட்டோம். சாவித்ரியுடன் திருமணமானதன் பின்னும் அப்பாவுக்கு எங்கள் அம்மாவின் மீதிருந்த நேசமும் மரியாதையும் அப்படியே தானிருந்தது. அப்படி இருக்க என் அம்மாவுடனான உறவில் காதல் இல்லை என எப்படிக் கூற முடியும். இது தவறான சித்தரிப்பு. அதுமட்டுமல்ல என் அப்பா தான் சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்தார் என்பதும் தவறான தகவலாகும்.

சாவித்ரி மூக மனசுலு சினிமாவை (தமிழில் பிராப்தம்) சிவாஜியை நாயகனாக வைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் போது அந்தத் திரைப்படத்தை கை விட்டு விடலாம். அது நஷ்டத்தையே தரும் என சாவித்ரியை கன்வின்ஸ் செய்ய என் தந்தை அவரது வீட்டுக்குச் சென்ற போது நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது சாவித்ரி வொட்ச்மேன் மூலமாக எங்களை வீட்டுக்குள் நுழைய முடியாமல் செய்தார். அதன் பின் நான் வேறு எப்போதும் அவரைக் காணச் சென்றதில்லை. உண்மை இப்படி இருக்க... என் தந்தையால் தான் சாவித்ரியின் வாழ்வு அழிவுப்பாதைக்குச் சென்றது போல காட்சிகளை சித்தரித்திருப்பது தன்னை மிகுந்த மனவருத்தம் அடையச் செய்திருப்பதாக ஜெமினியின் இரண்டாவது மகளும் பிரபல மகப்பேறு மருத்துவருமான டொக்டர் கமலா செல்வராஜ் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் குறித்து தனது புகாரை முன் வைத்துள்ளார்.


Add new comment

Or log in with...