கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை | தினகரன்


கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை

 

முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (14) ஐந்தாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நான்காவது முறையாக நாளை வரை (15) நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனு இன்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில், விசாரணைகளையோ, குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பிலோ தனது கட்சிக்காரருக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என, கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

ஆயினும் அவரை கைது செய்வது அல்லது பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் செயற்படாமல் இருப்பதாயின், இவ்வழக்கை சமாதானமாக நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தான் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவது அவசியம் எனவும், அதற்கு காலம் வழங்குமாறும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான, பிரதி சொலிசிட்டர் நாயகம் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பிலான, சட்டா மா அதிபரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும், சொலிசிட்டர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

வீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 - டிசம்பர் 06, டிசம்பர் 06 - டிசம்பர் 15, டிசம்பர் 15 - ஜனவரி 25, ஜனவரி 25 -  பெப்ரவரி 15 என குறித்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் ஐந்தாவது முறையாக இத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அம்மனுவில் தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...