ரூ. 1,000 கோடி பெறுமதி; 928 கிலோ கொக்கைன் அழிப்பு | தினகரன்


ரூ. 1,000 கோடி பெறுமதி; 928 கிலோ கொக்கைன் அழிப்பு

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 928 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை இன்று (15) இடம்பெற்றது.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குறித்த போதைப்பொருள் அழிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கொக்கேன் போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2016 டிசம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பல் ஒன்றில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இவற்றின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளன.

இதன்போது, முதலில் குறித்த போதைப்பொருள் கரைக்கப்பட்டு அழிக்கப்படுவதோடு, அதன் விளைவுகளாக பெறப்படுபவற்றை பின்னர் புத்தளம் பிரதேசத்தில் தகனம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடைபெறுகின்றது, என்பது தொடர்பில் பொதுமக்களிடம் காணப்படும் தோற்றப்பாடுகளுக்கு தீர்வாக இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத வகையில் பகிரங்கமாக அழிப்பது தொடர்பான முறையொன்றை எதிர்வரும் காலங்களிலும் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

அதே போன்று இவ்வருடத்தில் மேலும் சுற்றி வளைப்புகளை அதிகரித்து, போதைப்பொருளை இந்நாட்டிலிருந்து அழிப்பதற்கான நடவடிக்கையை மேலும் விரைவாக்குதற்கான நடவடிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சாகல ரட்நாயக்க, தலதா அத்துகோரள, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெனாண்டோ, போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்தா கிதலவஆரச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(படங்கள்: சுதத் சில்வா)

 


Add new comment

Or log in with...