எரிபொருள் தட்டுப்பாடு; வதந்திகளை பரப்புவோருக்கு நடவடிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரங்களை பரப்புவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிய வதந்தியை அடுத்து நேற்று (19) இரவு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெற்றோலிய சேமிப்பக டெர்மினல் லிமிடட் அத்தகவலை முற்றாக மறுத்திருந்ததோடு, போதுமான அளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் 011 5 455 130 எனும் இலகத்திற்கு அறியத்தருமாறு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

எரிபொருள் நிலுவை தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, குற்றபுலனாய்வு திணைக்களத்திற்று உத்தரவிட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...