விடைபெறுகிறார் அப்துல் கலாம் | தினகரன்

விடைபெறுகிறார் அப்துல் கலாம்

 மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பூதவுடல் தற்போது இராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு இரா மேஸ்வரத்தை அடுத்த பேய்க் கரும்பு கிராமத்தில் அப்துல் கலாமின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட வுள்ளது.

இராமேஸ்வரம் - மதுரை நெடுஞ் சாலையில் பேய்க் கரும்பு கிராமம் அமைந்துள்ளது. கலாமின் உடலை அடக்கம் செய்ய 1.85 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப் பட்டுள்ளது.

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் மண்டபத்தில் இருந்து அவரது பிறந்த மண்ணான இராமேஸ்வரத்துக்கு இராணுவ வாகனம் மூலம் நேற்று பிற்பகலில் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பஸ் நிலையம் அருகே அப்துல் கலாம் புகழுடல் வைக்கப்பட்டது முதல் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று காலை டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து இராணுவ வாகனம் மூலமாக டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கலாம் உடல் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் கலாமின் உறவினர்கள்,

மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஸ்ணன், மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் வந்தனர். இந்த விமானம் பகல் 12.30 மணிக்கு கலாம் உடலுடன் மதுரை

விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கலாம் உடலைப் பெற்றுக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட 10 பேர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் முப்ப டை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலமாக கலாம் உடல் மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டது. 6 ஹெலிகொப்டர்களும் பின் தொடர்ந்து சென்றன.

இந்த ஹெலிகொப்டர்கள் பிற்பகல் 2.10 மணியளவில் மண்டபம் சென்றடைந்தன. அற்கு கலாம் உடல் இறக்கப்பட்டு ஓ. பன்னீர்ச்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இராணுவ வாகனத்தில் கலாமின் புகழுடல் ஏற்றப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

இந்த வாகனம் சென்ற வழியில் பொதுமக்கள், மாணவர்கள் வரிசையாக நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3.10 மணியளவில் பிறந்த மண்ணான இராமேஸ்வரத்தை கலாமின் புகழுடல் சென்றடைந்தது. அங்கு பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கலாம் புகழுடல் வைக்கப்பட்டது.

தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இறுதி பிரார்த்தனையை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இதற்காக நீண்ட வரிசைகளில் பல மணிநேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர். நேற்று இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 


Add new comment

Or log in with...