இனவாதம், மதவாத பிரசாரங்களை தவிர்த்து கொள்ளுங்கள் | தினகரன்

இனவாதம், மதவாத பிரசாரங்களை தவிர்த்து கொள்ளுங்கள்

இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் களிடம் கோரிக்கை விடுப் பதாக தேர்தல்கள் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை மாத்திரம் இலக்குவைத்து வாக்குக் கேட்கும் வகையிலான பிரசாரங்கள் மற்றும் குறித்த ஒரு இனம் அல்லது மதத்தின் வாக்கு கிடைத்தால் போதும் போன்ற பிரசாரங்களை முன்னெடு ப்பதைத் தவிர்க்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்தின் 7ஆவது உப பிரிவின் கீழ் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் பிறிதொரு ஆட்சியை கோருவது பிழையானது என சகல வேட்பாளர்களும் சத்தியப்பிரமாணம் செய்து ள்ளனர்.

இதனை அவர்களுடைய ஆதரவாளர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதைப் போன்று இதனையும் தேர்தல் சட்டமீறலாக கருதுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இச்சந்திப்பில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட்டும் கலந்துகொண்டிருந்தார்.

இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் சமூகவலைத்தளங்கள் மூலம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மதத் தலைவர்கள் மதரீதியான பிரசங்கங்களை மேற்கொள்ளும்போது வேட்பாளர் ஒருவரை ஊக்குவிக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடு என்றும் அவர் கூறினார்.

மதத் தலைவர்கள் பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த முடியாதுள்ளது. அதேநேரம், குறித்த வணக்கஸ்தலத்தின் பிரதான மதகுரு தேர்தலில் போட்டியிட்டாலும் அந்த வணக்கஸ்தலத்தில் தேர்தல் அலுவலகத்தை அமைக்க முடியாது. அதேநேரம், தேர்தல் விதிகளை மீறும் வகையில் வீதிகளில் வேட்பாளரின் பெயர்கள் மற்றும் இலக்கம் என்பவற்றை வரைபவர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்திருப்பதுடன், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு அறிவித்து வருவதாகவும் கூறினார்.

தேர்தல் விதிகளை மீறும் வகையிலான பிரசாரங்கள் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சுவரொட்டிகள், பனர்கள் மற்றும் பதாகைகளைக் கொண்டு பிரசாரங்களை முன்னெடுக்கும் இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும். சுவரொட்டிகள், பனகர்கள் மற்றும் கட்டவுட்டுக்களை நீக்கும் பணிகளை பொலிஸார், பணியாளரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

“பொது மக்களின் பணத்தை பயன்படுத்தி போஸ்டர்களை அகற்றும் இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

மாற்றுவலுவுள்ளவர்களுக்கு விசேட ஏற்பாடு

வாக்களிப்பின் போது மாற்றுவலுவுள்ளவர்கள் மற்றும் வயோதிபர்களும் வாக்களிக்கக் கூடிய வகையில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக பாடசாலைகளில் மேல்மாடிகளில் உள்ள இடங்களை கீழ் மாடிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேநேரம், முதல் தடவையாக தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் மாற்றுவலுவுள்ளவர்களுக்காக சங்கேத பாஷையில் விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப் பட்டியலுக்கான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத எவரையும் தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக நியமிக்க முடியாது. இதனை இம்முறை கண்டிப்பாக கடைப்பிடிக்கவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


Add new comment

Or log in with...