இந்திய தேசம் சோகத்தில் உலகத் தலைவர்கள் அனுதாபம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்தியாவின் முன்னாள் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கட்கிழமை மாலை உயிரிழந்தார்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ. ஐ. எம். கல்வி நிறுவனத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு அன்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இருந்து அவரது பூதவுடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக குவாஹாட்டி விமான நிலையத்தில், கலாம் உடலுக்கு அசாம் முதல்வர் தருண் கோகோய், அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், இந்திய விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கோகோய் கூறும் போது, “இது தேசத் துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் குழந்தைகளை நேசித்தார். இத்தேசத்தை நேசித்தார். கலாமை நான் நிறைய முறை சந்தித்திருக்கிறேன். அவரை அசாமின் கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கி றேன். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையான மனிதர். அவரது மறைவுக்கு தேசமே கண்ணீர் சிந்துகிறது” என்றார்.

7 நாள் துக்கம்

மத்திய அரசு சார்பில் ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் நேற்று இயங்கின. 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நாளை நடைபெறுகிறது. இன்றிரவு 7 மணிக்கு அவரது உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

அவருக்கு நேற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக இரங்கல் வாசிக்கப்பட்டது. அப்போது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் எச்டி தேவே கவுடா ஆகியோரும் இருந்தனர்.

இதையடுத்து சபாநாயகர் 2 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்தார்.

மறைந்த அப்துல் கலாமின் உடல் நேற்று டில்லியில் உள்ள பாலம் சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

வெள்ளை ஆடை உடுத்தி வந்த பிரதமர் மோடி, கலாம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் முக்கிய விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அசாம் மாநிலம் கவுகாத்தி கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இராணுவ விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 7 மணிக்கு அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்ட வரப்படுகிறது. மாலை 7 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித் துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் உயிரிழந்தால் அன்றைய தினம் விடுமுறை விட வேண்டாம். பதிலாக கூடுதலாக ஒரு நாள் பணியாற்றுங்கள் என்று கூறியிருந்தார் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானாவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அண்டை மாநிலமான ஆந்திராவில் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்த சந்திரபாபு நாயுடு, நான் மரணம் அடைந்தால், அன்றைய தினம் விடுமுறை விட வேண்டாம். பதிலாக கூடுதலாக ஒரு நாள் பணியாற்றுங்கள் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக் காட்டினார்.


Add new comment

Or log in with...