110 சிவில் அமைப்புகள் ஐ.தே.முவுடன் ஒப்பந்தம்

 நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் 110 சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டன. இவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிவில் அமைப்புக்கள் சார்பில் நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்நின்று செயற்பட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க ங்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய குழுவினர் இதில் இணைந்து கொண் டனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என 110 பேர் இதில் இணைந்துகொண்டனர். நாட்டில் மேலும் ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்து, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட விடயங் களைக் கொண்டதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

தேர்தலின் பின்னர் கூடவிருக்கும் பாராளுமன்றத்தை அரசியலமைப்புக்கான சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் இணைக் கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தொகுதி வாரியில் தெரிவுசெய்து அனுப்புவதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் கட்சி தாவுவதைத் தடுப்பது தொடர்பில் புதிய ஏற்பாடுகளைக் கொண்டுவருவது குறித்தும் புரிணந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் சுயாதிபத்தியம் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நீதிபதிகளை நீக்குவதற்கான புதிய சட்டம், புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்களில் இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...