போதைப்பொருளை ஒழிக்க தெற்காசிய தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் | தினகரன்

போதைப்பொருளை ஒழிக்க தெற்காசிய தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்

 முழு தென்னாசியப் பிராந்தியத்திற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலே தலை நகரத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி நேற்று மாலை மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாலைதீவு ஜனாதிபதி வரவேற்றதுடன் ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இரு தரப்பு கலந்து ரையாடல்களின் போது இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையேயான உறவுகளை மேலும் பலப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர். இரு நாடு களுக்கிடையிலான 50 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் மனித வளங்களை பரிமாறிக்கொள்ளவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கிடை யேயும் சுகாதாரத்துறையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் அக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. சுற்றுலாத்துறையிலும் கூட்டுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பொதுநலவாய தலைவர் என்ற வகையிலும் தமது கடமைகள் பொறுப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

சர்வதேச மன்றங்களில் மாலைதீவு அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பாராட்டினார். எதிர்காலங்களிலும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு தமது ஒத்துழைப்புகள் வழங்கப்படுமென மாலைதீவு ஜனாதிபதி உறுதியளித்தார். 


Add new comment

Or log in with...