இனவாதத்தை நம்பியே ஐ.ம.சு.மு களமிறக்கம் | தினகரன்

இனவாதத்தை நம்பியே ஐ.ம.சு.மு களமிறக்கம்

 முன்னாள் எம்.பி. விமல் வீரவன்சவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழிநடத்திச் செல்லப்படுவதையிட்டு தான் மனம் வருந்துவதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றுத் தெரிவித்தார்.

சிரேஷ்ட தலைவர்கள் பலரைக் கொண்டுள்ள ஸ்ரீல.சு.க. இன்று விமல் வீரவன்சவின் நிலைப்பாட்டுக்குள் சிக்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறிகொத்தாவில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை அரசியல் மேடையை, நாட்டில் தீ மூட்டக்கூடிய இனவாத பிரசாரங்களுக்காக பயன்படுத்தக் கூடாதென்றும் அமைச்சர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.ம.சு.மு.வினர் இனவாதத்தை மாத்திரமே தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதனை தவிர வேறு எந்த வழியில் வேண்டுமானாலும் அவர்கள் தாராளமாக அரசியல் செய்யலாமென்றும் கூறினார்.

எமது நாட்டை பல ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் ஆட்சியிலிருந்த போதே பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஆகும். இன்னும் 02 வருடங்கள் ஆட்சி செலுத்த வேண் டியிருந்தும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் வீட்டில் ஓய்வாக இருக்காது, பரசூட் மூலம் குருணாகல் மாவட்டத்திற்கு வந்து குதித்துள்ளார்.

அவர் செய்வதறியாத நிலையிலேயே உள்ளார் என்பது அவரின் பொய் வாக்குறுதிகளிலிருந்தே தெரிய வந்துள்ளது. மஹாபொல புலமைப் பரிசிலை 6 ஆயிரத்தால் அதிகரிப்பதாகவும், தம்புள்ளை விவசாயிகளுக்கு குளிர்சாதனப் பெட்டியொன்றை பெற்றுத்தருவதாகவும் அவர் கூறி வருகின்றார்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே நாள்தோறும் அதிகளவிலான காய்கறிகள் வீதியில் கொட்டி எரிக்கப்பட்டன.

இளைஞர், யுவதிகளின் தொழில்களுக்காக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்காத மஹிந்த ராஜபக்ஷ, தற்போது அவர்களுக்கான விசேட கொடுப்பனவு குறித்து பேசுகின்றார்.

ஆனால் ஐ.தே.க. அரசாங்கம் மிக குறுகிய காலத்திலேயே தமது வாக்குறுதிகளை நிறைவேற்றியமையை மக்கள் நன்கு அறிவர் என்றும் அமைச்சர் கூறினார்.


Add new comment

Or log in with...