பிக் போஸ் 92 ஆம் நாள்: விருந்தாளியாக அஞ்சலி; ஜாலியான போட்டிகள்

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

ரொம்ப நாளைக்குப் பிறகு பிக்பாஸில் சண்டை, சச்சரவு இல்லாத சந்தோசமான ஒரு நாளாக இருந்தது நேற்றைய எபிசோட். 91 ஆம் நாளின் இரவு 8 மணியிலிருந்து விரிந்தது காட்சிகள். பிந்துவும் ஆரவ்வும் சுஜாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.  குறைவான ஓட்டுகள் பெற்றதாலேயே சுஜா வெளியேற்றப்பட்டார் என்றாலும் கூட யாருமே நாமினேட் செய்யாமல் சுஜா வெளியேறியது பிந்துவால் புரிந்துகொள்ளமுடியவில்லையாம். சுஜாவை ஒரு பெக்யூலியர் கேரக்டர் என்று குறிப்பிட்டார். ’என் வாழ்க்கை போராட்டம் அது இதுன்னு சிம்பதி கிரியேட் பண்றா’ என்று ஆரவ் சுஜாவைப் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்தார். எப்பவுமே அதையே சொல்லிட்டு இருக்குறதுக்குப் பதிலா ஜாலியா இருந்துட்டு எப்பவும் போல துணிச்சலா விளையாடி என்னைக்காவது ஒருநாள் அவளுடைய கஷ்டங்களைப் பத்தி மக்கள் தெரிஞ்சுக்கிட்டா அப்போ அவளுக்கு கிடைக்கிற மரியாதையே வேற மாதிரி இருக்கும் என்றார். உண்மைதான். நமது கஷ்டங்களை நாமே பறைசாற்றிக் கொண்டிருந்தால் ஒருத்தரும் மதிக்கப்போவதில்லை..  நான் கஷ்டப்படுகிறேன் என்று தொடர்ந்து நிரூபிக்க முயன்றுகொண்டே இருப்பதால் யாரும் மதிக்கப்போவதில்லை.  மாறாக நம் மீதான வெறுப்புதான் அதிகரிக்கும். அதுவே வெளியில் எந்தக் கஷ்டத்தையும் காட்டிக்கொள்ளாமல் நம் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது ஏதோ ஒருநாள் நாம் என்னென்ன கஷ்டப்பட்டோம் என்பது தெரியவந்தால் அன்று நமக்கான மதிப்பு பன்மடங்கு கூடும். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். இது சுஜா சொல்லிச் சென்ற பாடம். அன்றைய நாள் முடிந்து விளக்குகள் அணைந்தது. 

ஆரவ், பிந்து மாதவி

 

92 வது நாள் விடிந்தது. இன்னும் ஆறு நாட்களே இருப்பதாக லிவிங் ரூமில் இருந்த டிவியில் டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். ஆனால் யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக 9 மணிக்கு ‘வேக்கப் சாங்’ ஒலிக்கவிட்டார்கள் இன்று மீண்டும் 8 மணிக்கு ஒலித்தது. ‘பைரவா’ படத்திலிருந்து ‘பாப்பா பாப்பா பப்பரப்பப்பா’ பாடல் ஒலிபரப்பட்டது. இந்தப் பாடலில் ’இங்க எல்லாருமே இனி உங்க ஆளப்பா’ என்று ஒருவரி இருக்கும். அதுதான் இந்த பாடலின் வாயிலாக பிக்பாஸ் நமக்குக் கடத்த நினைக்கும் செய்தி போல. எல்லாருமே முன்பே எழுந்துவிட்டார்களென்பதால் களைப்பின்றி ஆடினார்கள். சிநேகனுக்கும் டான்ஸூக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தால்கூட எட்டாதுபோல. சாவுக்குத்து குத்திக் கொண்டிருந்தார். அதுசரி தாடிவைத்தவரெல்லாம் பிரபுதேவா என்று நினைக்கமுடியுமா என்ன?
டிவியில் இருந்த ’6 Days to Go’ என்கிற செய்தியையும் இப்போதுதான் கவனித்தார்கள். அந்த செய்திக்கு பக்கத்திலேயே ‘அசையும் கமல்’ வைத்திருந்தார்கள். அனிமேசனில் கமல் மூச்சுவிடுவதை கண்காட்சியைப் பார்ப்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தார் பிந்து. நமக்கு பிந்துவைப் பார்ப்பதுதான் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. (ம்ஹூம் இனிமே இப்படிலாம் எழுதக்கூடாது.. கமெண்ட்ல ஜொள்ளுனு திட்டுறாய்ங்க)."பக்கத்துல போகாதீங்க பிந்து, கமல் டக்குன்னு பேச ஆரம்பிச்சுடுவாரு " என்றார் ஆரவ். ஆரவ்வின்  டைமிங் கமென்ட்கள் தான் பல சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குக்கிறது. காலைலயே கடவுள் மூஞ்சியப் பாத்தாச்சு என்றார் சிநேகன். 

ஆரவ், கமல்

கடைசி வாரம் என்பதால் பிரியப்போகிறோம் என்கிற சோகம் எல்லாரையும் ஆக்கிரமித்திருந்தது. அதற்காகவேகூட டிவியில் கவுண்டவுன் போட்டிருக்கலாம். அது வொர்க் அவுட் ஆகிற டெக்னிக்தான். பரீட்சைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்றன என்று சுவரில் ஒட்டி வைத்து பொதுத்தேர்வுக்குப் படிப்பவர்களுக்குத் தெரியும். பிந்துவும் ஆரவ்வும் பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ற பிறகு எதையெல்லாம் மிஸ் பண்ணப்போகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். சனிக்கிழமை தான்  வெளியேறினாலும்கூட 100 வது நாள் என்ன கூத்து நடக்குதுனு நான் பாத்துட்டுதான் போவேன் என்றார் பிந்து. காலைல எழுந்ததும் டான்ஸ் ஆடுவதை நிச்சயம் மிஸ் பண்ணப்போவதாக சொன்னார்கள். எந்த ஒரு விஷயத்தையும்  100 நாட்கள் தொடர்ந்து செய்தால் அதுவே பழகிவிடும் என்றார் ஆரவ்.  ’டாஸ்க்.. பஸ்ஸர்.. லக்சரி பட்ஜெட்.. வேக்கப் சாங்’ என இத்தனை நாள் அந்த வீட்டில் தொடர்ந்து கேட்டுவந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்கள். வெளியில் போனாலும் நண்பர்களிடம் ‘டாஸ்க் கொடுங்க’ என்று கேட்டு வாங்கி பண்ணப்போவதாகச் சொன்னார் பிந்து மாதவி..

பிந்து மாதவி

மொட்டை வெயிலில் நீச்சல்குளத்தில் ஆரவ்வும் சிநேகனும்... தாடியில்லைனாலும் மக்கள் தன்னை ஆதரிப்பாங்களா என்று கவலைப் பட்டுக்கொண்டார் சிநேகன். ’பலூன் டாஸ்க்ல முடிஞ்சப்பறம் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கவே முடியல’ அவ்ளோ கஷ்டப்பட்டோம் இனி அதுபோன்ற டாஸ்க்குகள் இருக்கக்கூடாது என்றார். டாஸ்க்குகளால் திங்கள் கிழமையும் செவ்வாய்கிழமையும் நீண்டதாக இருக்கிறது என்றார் பிந்து. பிக்பாஸ் வீட்ல மட்டுமா ஆபிஸ் போற, காலேஜ் போற எல்லாருக்குமே அதே ஃபீலிங்குதான். ஞாயிற்றுக்கிழமை புஸ்வானத்தை பத்தவச்சா மாதிரி டப்புனு முடிஞ்சிடுது.. திங்கள்கிழமை மெழுகுவர்த்திய பத்தவச்சா மாதிரி எரிஞ்சுக்கிட்டே கெடக்கு. 

**
மதியம் ஒரு மணிவாக்கில் போட்டியாளர்கள் எல்லோரையும் லிவிங் ரூமுக்கு அழைத்து மீட்டிங்கைப் போட்டார் பிக்பாஸ் (நாட்டுல இந்த திங்கட்கிழமை மீட்டிங்கை முதல்ல ஒழிக்கணும்). இதுதான் கடைசிவாரம் என்பதை மீண்டும் நினைவூட்டினார். டாப் 5 போட்டியாளர்களாக வந்திருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னார். கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். இந்த ஒரு வாரம் முக்கியமானது அதனால் சோர்வாகாமல் வெற்றிபெற உங்களின் சிறந்த முயற்சியை எடுங்கள். முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக செயல்படுங்கள் என்று வாழ்த்தினார்.

வீட்டுக்குள் ஒரு விருந்தாளி வரப்போகிறார் அதனால் வீட்டை சுத்தம் செய்து அவருக்காக ஸ்பெஷல் டிஸ் செய்து வையுங்கள் என்ற அறிவிப்பை வாசித்தார் ஆரவ். அதோடு அவர் முன் எல்லாரும் ஏதோ ஒரு பெர்பாமன்ஸ் கொடுக்கவேண்டும். டான்ஸ், மிமிக்ரி, பொயட்ரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொயட்ரீனா கவிதைதானே என்று சந்தேகம் கேட்டார் சிநேகன். ’டான்ஸ் ஜோடியா ஆடணுமா? தனியாவா?’ இது கணேஷின் சந்தேகம். அதோடு இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வாசித்தார். ‘இந்த கடைசி வாரத்தில் மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்வு செய்பவரே வெற்றியாளர் என்ற நிலையில். யாரும் நேரடியாக கேமரா முன் சென்று வாக்குசேகரிப்பதுபோல் பேசுவதோ.. டாஸ்க்குகளின் வாயிலாக தங்களுக்கு ஓட்டுப்போடச் சொல்லி கேட்பதுபோல் நடந்துகொள்ளக் கூடாது ’. இப்போது வரப்போகும் விருந்தாளி யாருடைய பெர்பாமன்ஸ் சிறந்தது என்று தேர்வு செய்கிறாரோ அவருக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிசன். ஒரு நிமிடம் பிரசாரம் செய்துகொள்ளத் தரப்படும். 

அஞ்சலி

பிந்துமாதவியும் கணேஷூம் டான்ஸ் பிராக்டிஸில் ஈடுபட்டார்கள்.  ஆரவ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ’தளபதி’ மம்முட்டி வசனத்தைப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஹரீஷ் தனியாக பாடிக்கொண்டிருந்தார். சிநேகன் அந்த விருந்தாளியை வரவேற்பதற்காகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். 
**
’சொட்ட சொட்ட நனைய வைத்தாய்’ பாடல் ஒலிக்க கலர் கலர் பலூன்களுடன் என்ட்ரீ கொடுத்தார் அஞ்சலி.பக்கத்து வீட்டுப்பெண் போல எப்போதும் இருக்கும் அஞ்சலி, ஏனோ, ஓவர் மேக்கப்பில் வந்திருந்தார். எல்லோரும் வரவேற்றார்கள். சிநேகனும் கை கொடுத்து வரவேற்றார் (நல்ல முன்னேற்றம்). கையில் கொண்டு வந்திருந்த பலூனை ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து அதான் உங்களுக்கான டாஸ்க்.. பலூனை உடையாமப் பார்த்துக்கோங்க என்று கலாய்த்தார் அஞ்சலி. ’ஜெய் வரலையா?’ என்று ஹரீஷ் கேட்டார். (அவனவனுக்கு அவனவன் கவலை). அநேகமாக அவர்களில் சிலரை இன்றுதான் முதன்முதலாகப் பார்த்திருப்பார் அஞ்சலி. ஆனாலும் பல நாட்கள் பழகியவர் போல அவ்வளவு இயல்பாகப் பேசினார். டிவியில் பார்த்துப் பார்த்துப் பழகிய முகம் என்பதாலோ? கடிதத்தோடு ஒட்டிக்கொள்ளும் அஞ்சல்தலைபோல் ஹவுஸ்மேட்ஸூடன் ஒட்டிக்கொண்டார் அஞ்சலி.  வெளியிலிருந்து வர்ற ஒரு ஆளைப் பாக்குறது கடவுளைப் பாக்குற மாதிரி இருக்கு என்றார்கள். டிவியில் கமல் முகத்தைப் பார்த்து சிநேகன் கடவுள் முகத்தைப் பார்த்தாச்சு என்று சொன்னபோது கொஞ்சம் மிகையாகத் தோன்றியது. ஆனால் சாதாரண வெளியாட்களையும் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்க்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்றால் கமல் சிநேகனுக்கு கடவுளாகத் தோன்றியதில் தவறே இல்லை. 
பலூன் மூவியின் ப்ரோமசனுக்காக உள்ளே வந்திருந்தார் அஞ்சலி. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு முதலில் கேட்டது பிந்து. ’என்ன மூவி வந்திருக்கு லாஸ்ட் வீக்?’ என்று கேட்க  ‘இதெல்லாம் உங்களுக்கு பழகிடுச்சுல’ என்றார் அஞ்சலி. சிநேகன் அஞ்சலிக்கு தன் கையால் செய்த பாயாசத்தை வழங்க அவர் ரசித்து ருசித்தார். ‘நல்லாருக்குங்க’ என்று அஞ்சலி சர்டிஃபிகேட் கொடுக்க.. ‘அதை இவங்ககிட்ட சொல்லுங்க’ என்று சிநேகன் சொல்ல.. ‘ஸ்ஸ்ஸ் கெஸ்ட்டு கெஸ்ட்டு’ என்று சமாதானப்படுத்தினார் ஆரவ். ’பாயாசம் மட்டும்தான் பண்ணினோம் நீங்கதான் சமைக்கணும்’ என்று சிநேகன் போட்டு வாங்க... ‘எனக்கே டாஸ்க் கொடுக்குறீங்களா?’ என்று அஞ்சலி ஆவேசமானார்.

கணேஷ்

**
பாயாசம் உண்ட கையோடு தனது பாய்ச்சலைத் தொடங்கினார் அஞ்சலி. ‘டாஸ்க் கொடுத்தா ஏன் பண்ணமாட்டேன்னு சொல்றீங்க?’ முதல் கேள்வி பிந்துவுக்கு. விருந்தாளி பட ப்ரோமசனுக்குத்தான் உள்ளே அனுப்பப்படுகிறார் என்று தெரிந்தவருக்கு அவரிடம் கூடவே வில்லங்கத்தையும் கொடுத்து அனுப்புவார்கள் என்று தெரியாது போல.. சடாரென்று இப்படி ஒரு கேள்வி தன் மீது பாய்ந்ததும் கொஞ்சம் திணறிப்போனார். பின்பு நிதானித்து, ‘இரண்டு டாஸ்க் மட்டும்தான் இதுவரைக்கும் பண்ணமாட்டேன்னு சொன்னேன். மீதி எல்லாமே பண்ணிட்டேன்’ என்று தன் பக்கம் இருந்த நியாயத்தைச் சொன்னார். அஞ்சலி குறுக்கு விசாரணை எதையும் நடத்தவில்லை. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே.. ‘வெல்கம்’ என்று வழக்கமான பிக்பாஸ் குரல் ஒலிக்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத அஞ்சலி லைட்டாக ஜெர்க் ஆனார். அஞ்சலியின் முன் பெர்பாமன்ஸ் செய்துகாட்டும் ஹவுஸ்மேட்களில் சிறந்த பெர்பாமன்ஸை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவருக்கு இருப்பதை பிக்பாஸ் நினைவூட்ட அருகிலிருந்த சிநேகன்.. ‘பாயாசமெல்லாம் பண்ணிக் கொடுத்தேன் பாத்து பண்ணுங்க’ என்றதும் அஞ்சலி ‘செல்லாது செல்லாது’ என்று மறுத்தார். 
அஞ்சலியின் அடுத்த கேள்வி கணேஷூக்கு. ’டெய்லி ஒர்க் அவுட் பண்றீங்க.. யோகா டாஸ்க் கொடுத்தப்போ ஏன் பண்ணலை?’ கணேஷ் என்ன செய்திருப்பார்... வழக்கம்போல படம் வரைந்து பாகங்கள் குறித்து தனது தியரியை விளக்கினார். இவருடைய ப்ளஸ் டூ மார்க் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். அநேகமாக பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீயில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்போல! எவ்வளவு தியரிக்கள் இருக்கிறது அவரிடம். 

அஞ்சலி, பிந்து மாதவி

அஞ்சலியை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். ’என்னை எலிமினேட் பண்ணப் போறாங்களா.. ஒன் வீக் இருக்கலாம்னு வந்தேன்’ என்றுகூறி ’சிம்பொனி’த்தார்.. ஸாரி சிரித்தார். பிக்பாஸ் வீட்டில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?  (உள்ளே நுழைஞ்ச அரை மணி நேரத்துலயேவா?) என்று கேள்வியைத் தொடங்கினார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியும் ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டார் அஞ்சலி. ’தென்னிந்தியாவிற்கு இப்படி ஒரு நிகழ்ச்சி புதிது.. எத்தனை விதமான கேரக்டர்களை பார்க்கமுடியுது.. கொஞ்ச கொஞ்சமா ஃபில்டர் ஆகி இப்போ இருக்குறவங்ககிட்ட நல்ல குணங்கள் அதிகமா பாக்கமுடியுது. ரொம்ப நாள் நடிக்க முடியாது யாராலயும்’ என்று தன் கருத்துகளைப் பதிவு செய்தார். கடைசியாக செல்லும் போது ‘பிரின்ஸஸ் சேர் மாதிரி இருக்கு’ என்று கன்ஃபஷன் ரூமில் இருக்கும் சேரைப் பற்றி புகழ்ந்துவிட்டுச் சென்றார்.
**
அஞ்சலியின் முன் தங்கள் பெர்பாமன்ஸ்களைத் துவங்கினார்கள் போட்டியாளர்கள். முதலில் களமிறங்கியவர் ஹரீஷ். இருவிழி உனது.. சாய்ந்து சாய்ந்து ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். அருமையான குரலில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றாக ஃபீல் பண்ணியும் பாடினார். அதற்குமேல் அனந்த் வைத்யநாதன்தான் கருத்து சொல்லவேண்டும். உண்மையில் ரசிக்க வேண்டியவர்களான அஞ்சலியும் பிந்துவும் ரசித்தார்கள். ’கவுத்துட்டானே’ என்பதுபோல் பார்த்தார்கள் ஆரவ்வும் சிநேகனும்.     அடுத்து பிந்து. ஒத்த சொல்லால பாட்டுக்கு செம டான்ஸ் போட்டார். ஆரவ், கணேஷ், அஞ்சலி, ஹரீஷ் என்று ஒவ்வொருவராக உடன் ஆடினார்கள். வெளுத்து வாங்கினார். பிந்துமாதவின் அழகே கண்கள் தான். ஆனால் , வீடு முழுக்க கேமராக்கள் வைத்திருக்கும் பிக்பாஸ், ஒருமுறை கூட பிந்து மாதவியின் கண்களுக்கு க்ளோஸ் அப் வைக்காமல், கேமராவை நகர்த்திக்கொண்டு இருந்தார். என்னமோ போங்க!

வாக்குமூல அறையின் கதவுக்கு அருகில் போஸ் கொடுத்து நின்றபடி தனது நடனத்தைத் தொடங்கினார் கணேஷ். ஆனால் அங்கே ஏன் போய் நின்றிருந்தார்? ஒருவேளை ’சக்கரவள்ளியே...’ என்று அந்தப் பாடல் தொடங்கியதால் சக்கர வடிவில் இருந்த அந்த இடத்தைத் தேர்வு செய்திருப்பாரோ? ’நங்காய்’ பாடலுக்கு சிதறு தேங்காய் உடைப்பதுபோல சில ஸ்டெப்கள் போட்டார்.கணேஷ் அது உண்மையிலேயே மைக்கல் ஜாக்ஸன் பாடல் என நினைத்துவிட்டாரோ என்னவோ, ஏதேதோ செய்து கொண்டு இருந்தார். சிநேகனும் ஹரீஷூம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிந்துவும் உடன் ஆடினார். வழக்கமாக வேக்கப் சாங்கிற்கு கணேஷ் நன்றாக ஆடுவார். இன்றோ ஏனோ கொஞ்சம் சொதப்ப மற்றவர்கள் நகைக்கும்படி ஆனது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கணேஷ். 
’தளபதி’ மம்முட்டியும் ரஜினியும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால் எப்படி பேசியிருப்பார்கள் என்ற கலக்கப் போவது யாரு சீசன் 1 காலத்து ஐடியாவை எடுத்து பண்ணியிருந்தார் ஆரவ். வாய்ஸ் வரவில்லையென்றாலும் மாடுலேசன் கொஞ்சம் ஒத்துப் போனது. (அட்றா அட்றா ஆரவ்வு..). ஸ்க்ரிப்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் எல்லாரையும் சிரிக்க வைத்திருப்பார். சிநேகன் ஏனோ ஒன்றுமே செய்யவில்லை.

பிக் பாஸ் தமிழ்

ஹரீஷ் பாடிய பாடல் தனக்குப் பிடித்திருந்ததால் அவரை வெற்றியாளராகத் தேர்வு செய்வதாக அறிவித்தார் அஞ்சலி. அடுத்து எல்லாருக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன்வைத்தார்.  ’வெளில போன    தும் என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்க, சிநேகன்.. ‘அப்பாவைப் பாக்கணும்.. கிராமத்துக்குப் போகணும்..’ என்றார். ஆரவ்.. ‘மக்கள் கைலதான் இருக்கு’ என்றார். பிந்து ‘சண்டை இல்லாம போகணும்’ என்றார்.

ஆரவ்

 

**
5 மணிக்கு அஞ்சலியின் வருகையை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் வைத்தார்கள். அதன் பெயர் ‘கவ்விக் கொள்ளவா’ (அட ஆண்டவா). நடு நெற்றியில் ஒரு பிஸ்கட்டை வைத்து கையில் தொடாமல் வாய்க்கு கொண்டு வந்து லபக்கென்று கவ்வ வேண்டும். இதுதான் பெயர்க்காரணம்; விவகாரமாக எதுவும் நினைக்கவேண்டாம்.  அஞ்சலி இந்தப் போட்டியின் நடுவர். யார் முதலில் ஆரம்பிப்பது என்ற பேச்சு வர ‘என்னை விட்ருங்க... பாயாசம்லாம் கொடுத்திருக்கேன்’ என்று ஜகா வாங்கினார் சிநேகன். இவரு வேற ஒரு கப்பு பாயாசத்தைக் கொடுத்திட்டு ஒருவாரத்துக்கு சொல்லிக்காட்டுறாப்ல. அஞ்சலி, முதல் போட்டியாளரை எப்படி தேர்வு செய்வது என்று குழம்ப அஞ்சலிதேவி காலத்து டெக்னிக்கான விரலில் தொட்டு முடிவுசெய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதன் படி முதல் போட்டியாளர் கணேஷ். 

கணேஷ் ஆட்டத்தைத் தொடங்கிய பிறகுதான் அது அவ்வளவு ஈசியில்லை என்று புரிந்து கொண்டார்கள். நெத்திச்சுட்டியைப் போல ஒட்டிக்கொண்ட பிஸ்கட் எவ்வளவு முயன்றும் நகரவேயில்லை. கொஞ்சம் அசைத்தால் கீழே விழுந்துவிடுகிறது. "மூக்குன்னு ஒன்னு இல்லாம இருந்தா கரெக்ட்டா, வாய்க்கு வந்துடும்ல" என்று தன் யோசனையை சொன்னார் ஹரிஷ்(மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் பாஸ் தோணும்). ஹரீஷூக்கும் தோல்விதான். ஆரவ் கொஞ்சம் சாதுர்யமாக செயல்பட்டு ஒரு பிஸ்கட்டை லபக்கினார்.ஆரவ் மைக்ரோ செகண்டில் அதை வாயில் கவ்வியது அருமை.  அடுத்ததாக பிந்து, அவர் நெற்றியில் இருந்து கன்னத்திற்கு புனித யாத்திரை போவதைப் போல பிஸ்கட் ஒரு உல்லாசப் பயணத்தை மேற்கொண்டது. எனினும் இலக்கை அடையவில்லை. தோல்வியைத் தழுவியது பிஸ்கட்.

பிந்து மாதவி

சிநேகன் களமிறங்கினர். இந்த டாஸ்க்கில் தாடி அவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.  நெற்றியில் பிஸ்கட்டை வைத்து கண்களைச் சிமிட்டி சிமிட்டி மிக மெதுவாக நகர்த்தி வாய்க்குக் கொண்டு கவ்வினார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பிஸ்கட்டுகள். அடுத்ததாக அஞ்சலியையும் ஆட்டத்தில் தள்ளிவிட்டார்கள். அவர் நெற்றியில் பிஸ்கட் சூட்டப்பட்டது. " உங்க Facial muscles மட்டும் மூவ் பண்ணுங்க. Its sliding to your left என கவுதம் மேனன் பட ஹீரோ போல் வர்ணனை செய்து கொண்டு இருந்தார் கணேஷ்.  சிநேகனின் டெக்னிக்கையே அஞ்சலியும் பின்பற்றினார். சில நொடிகள் கன்னத்தைவிட்டு அகலாமல் பிஸ்கட் அடம்பிடிக்க.. கஷ்டப்பட்டு வாயில் கவ்விப் பிடித்து அவரும் டாஸ்க்கை முடித்தார். இந்த டாஸ்க்கில் சிநேகனுக்கு வெற்றி கிடைத்தது.
**
நேற்றைய ப்ரோமோவில் வந்தது அஞ்சலிதான்.. பலூன் படத்தின் ப்ரோமோசனுக்காக வருகிறார் என்பது ஊர்ஜிதமானதும் ‘இந்தப் படத்துல ஓவியா சொன்ன டயலாக்கை மையமா வச்சு ஒரு பாட்டே வந்திருக்குனு தெரிஞ்சா ஆரவ் எப்படி ஃபீல் பண்ணுவாப்ல?’ என்று நண்பரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அஞ்சலி சொல்வதற்கு முன்பாகவே பிக்பாஸ் ’ஷெட்டப் பண்ணுங்க’ பாடலுக்கு அஞ்சலி உட்பட அனைவரையும் நடனமாடப் பணித்தார். யுவன் இசையில் அனிருத் பாடிய அந்தப் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஹரீஷூக்கும் பிந்துவுக்கும் இந்த வரிகள் எவ்வளவு வைரல் என்பது தெரிந்திருந்தது. மற்ற மூவரும் ஏதோ பாடல் போல என்று ஆடினார்கள். ஆரவ் மங்காத்தா ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார் (மங்காத்தாடா). பிறகு அஞ்சலி இது ஓவியா இங்க சொன்னதுதான் இப்போ பாடலா வந்திருக்கு என்று சொன்னதும் ஆரவ் முகத்தில் சந்தோசமும் ஆச்சர்யமும் கலந்திருந்தது. பிறகு பிக்பாஸ் அஞ்சலியை வெளியேறச் சொல்ல.. விடைபெற்றார்.

அஞ்சலி

**
அன்றைய நாளுக்கான டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘கூடை மற்றும் பந்து’.  இரண்டு டீமாக பிரிந்துவிளையாட வேண்டும். ஐந்து பேரை இரண்டாக பிரித்தால் இடிக்கும் என்பதால் பிந்துவை நடுவராகப் போட்டார்கள். ஆரவ்வும் சிநேகனும் ஒரு டீம். கணேஷூம் ஹரீஷூம் ஒரு டீம். ஒருவர் பந்துகளை எறிய இன்னொருவர் தன் தலையில் மாட்டியுள்ள கூடையால் பிடிக்க வேண்டும் என்பது டாஸ்க். சிநேகன் தலையில் கூடை மாட்டியிருந்ததைப் பார்த்தபோது பழைய எம்ஜிஆர் படங்களில் போலீஸ் மாட்டியிருக்கும் தொப்பியைப் போலவே இருந்தது. 14  பால்கள் தன் கூடையால் பிடித்தார் சிநேகன். 
அடுத்த டீமில் கணேஷ் கொஞ்சம் தலையைக் குனிந்து வைத்து பந்துகளைப் பிடித்ததால் மிகக் குறைவான பந்துகளையே தவறவிட்டார். மொத்தம் 27 பந்துகளை பிடித்தார்கள். இரண்டாவது ரவுண்டில் ஆரவ் தன் தலையில் மாட்டிய கூடையால் 29 பந்துகளைப் பிடிக்க ஹரீஷ் முகம் சுருங்கியது. மற்றவர்கள் கூடையை மாட்டியிருந்தபோது பந்துவரும் திசைக்கு ஏற்ப நகர்ந்து பந்தை கூடைக்குள் விழவைத்தார்கள். ஹரீஷ் கூடையை மாட்டியிருக்கும்போது நகராமல் அங்கேயே இருந்ததால் நிறைய பந்துகளை தவறவிட்டார். இரண்டாவது ரவுண்டில் 14 பந்துகளை மட்டுமே ஹரீஷ் பிடிக்க இரண்டு பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிநேகன் - ஆரவ் கூட்டணி.

கணேஷ்

**
10 மணிக்கு அடுத்த டாஸ்க்கை அறிவித்தார்கள். இதன் பெயர் ‘பாத்து தம்பி’. ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு பெரிய கட்டத்திற்குள்  வரிசையாக பேப்பர் கப்களை அடுக்கி வைத்திருப்பார்கள். (இதை அடுக்குவதற்கே பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும்) கட்டத்தின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். தன் அணியினரின் வழிகாட்டுதலின்படி கப்புகளை மிதிக்காமல் கடக்கவேண்டும் இதுதான் டாஸ்க். இதில் சிநேகன் - ஹரீஷ் ஒரு டீம், பிந்து - ஆரவ் இன்னொரு டீம். இந்த முறை கணேஷ் நடுவர். ஹரீஷ் ஒரு கப்பை மட்டும் மிதித்து எல்லையைக் கடந்தார். ஆரவ், சிநேகன் இருவரும் ஒரு கப்பைக் கூட மிதிக்காமல் கடந்தார்கள். பிந்து, அம்மன் படங்களில் சொட்ட சொட்ட மஞ்சத்தண்ணியில் குளிச்சு ’கோலவிழியம்மா ராஜகாளியம்மா’ என்று தீக்குளி இறங்கும் ஹீரோயின் போல நடந்தார்.  அவரும் ஒரு கப்பையும் மிதிக்கவில்லை. ஹரீஷ் மட்டும் ஒரேயொரு கப்பை மிதித்திருந்ததால் பிந்து - ஆரவ் கூட்டணி இம்முறை வெற்றி பெற்றது.

இந்த கேம் இன்னும் ஜாலியாக இருந்ததால் ஆட்டம் முடிந்தபின்பும் கப்புகளுக்கு நடுவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியோடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வெளியில் ஜாலியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் ’மனதளவில் பதட்டமாகத்தான் இருக்கிறார்கள்’ என்று குரலுடன் விளக்குகள் அணைந்தது. எது எப்படியோ இந்த நாள் முழுவதும் சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் மிக சந்தோசமான நாளாக இருந்தது. யப்பா... பிக்பாஸ்ல இப்படி ஒரு நாளைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. 


- தி. விக்னேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

 


Add new comment

Or log in with...