பிக் போஸ் 91 ஆம் நாள்: சுஜா வெளியேற்றப்பட்டார்

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

சனிக்கிழமை கமலைச் சந்தித்து முடித்த பிறகான காட்சிகளில் இருந்து நேற்றைய நிகழ்ச்சி தொடங்கியது. எல்லாரும் எழுந்து செல்ல சுஜா அப்படியே படுத்துவிட்டார். சனிக்கிழமை கமல் முன்பு எல்லா போட்டியாளர்களும் சுஜாவை ஃபேக் என்று குறிப்பிட்டது. சுஜாவைப் பற்றி நெகட்டிவாக சொல்லும்போது மக்களிடமிருந்து வந்த கைதட்டல்கள் இதெல்லாம் சுஜாவை மனதளவில் வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கணேஷிடம் தனது புலம்பல்களைக் கொட்டிக் கொண்டிருந்தார். ’நான் உண்மையாக இருந்தா மட்டும் பேசுங்க.. இல்ல, நான் பொய்யா தான் இருக்கேன் நினைச்சீங்கன்னா, எங்கிட்ட பேசுறத நிப்பாட்டுங்க.  வீட்டுல இருக்குறவங்க என்கூட ஒழுங்கா பேசுங்க.. வெளில மக்கள் எப்படி நினைச்சாலும் அதை நான் பாத்துக்குறேன்’ என்று தான் முன்னமே சொன்னதை இப்போதும் நினைவூட்டினார். எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு என்று சொன்னதோடு ‘என் தலைல எவ்ளோ முடி இருக்கோ அவ்ளோ பிரச்சனை இருக்கு’ என்று ஃபீலிங்ஸ் காட்டினார்.

சுஜாsuja

சுஜா சிநேகனிடம் தனக்கு பாயின்ட்ஸைக் கொடுக்கும்படி கேட்டால் எப்படி கேட்பார் என்று ஆரவ் வழக்கம்போல இமிட்டேட் செய்துகாட்டினார். மற்ற நாளாக இருந்தால் ரசித்திருக்கலாம். அந்தப் பக்கம் சுஜா ஃபீலிங்கில் இருக்கும்போது எப்படி ரசிக்க முடியும்? 

உண்மையில் மிக தர்மசங்கடமான சூழலில்தான் தள்ளப்பட்டிருக்கிறார் சிநேகன். தாடியின் ஆக்கிரமிப்பு போக மீதி இருந்த அவர் முகத்தை இப்போது குழப்பம் ஆக்கிரமித்திருந்தது. ஐந்து பேரில் ஒருவருக்கு கொடுக்கலாம் என்றிருந்தால் தான் இவ்வளவு யோசித்திருக்கமாட்டேன் என்று பிந்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ’யாருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேனோ அவங்களுக்கு கொடுக்க முடியலை’ என்பது அவரின் கூடுதல் வருத்தம். அப்படியானால் சிநேகன் அந்த பாயின்ட்டை ஹரீஷ், பிந்து, ஆரவ் மூவரில் யாருக்கோ கொடுக்கலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார். ஆரவ் பாயின்ட்ஸ் கம்மியாக எடுத்திருந்ததால் அவருக்குக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்க வாய்ப்புண்டு. அது யார் என்பதை பிந்துவும் கணித்தார்போல.. ‘எனக்கும் ஒரு பேர் தோணுது.. ஆனா இப்போ சொல்லமாட்டேன்’ என்றார். சுஜா, கணேஷ் இருவரையும் சிநேகனிடம் சென்று மதிப்பெண் சேகரிக்கச் சொல்லி இறுதி சந்தர்ப்பம் ஒன்றை வழங்கினார் பிக்பாஸ். சுஜாவுக்கு சிநேகன் மதிப்பெண்களைக் கொடுக்காவிட்டாலும் டாஸ்க்களின் மூலம் அவர்தான் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பதால் அவரை வெளியேற்றமுடியாது என்று ஹரீஷூம் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கருடபுராணத்தில் வரும் தண்டனைகளையெல்லாம் டாஸ்க்குகளாக வைத்து போட்டியாளர்களை நொங்கெடுத்து வழங்கிய பாயின்ட்ஸ் இதுவரை  சிநேகனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதிகமான பாயின்ட்ஸ் எடுத்திருந்தும் சுஜாவும், கணேஷூம் வெளியேற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த பாயின்ட்ஸ்? இனிவரும் நாட்களில் பயன்பட்டால் மகிழ்ச்சி. பிக்பாஸூம் மோடியைப் போல ஒரே அறிவிப்பில் இனி அதெல்லாம் செல்லாது என்று அறிவித்துவிட்டால் என்ன செய்வது?

சுஜா, கணேஷ், சீநேகன்

**
சிநேகனுக்கு இருவருக்குமே ஏன் கொடுக்கலாம் என்பதற்கு ஒரு காரணம் இருந்தது. கணேஷ் ஒரு முறை தனக்குக் கிடைத்த க்யூ கார்டை பயன்படுத்தி சிநேகனை எவிக்சனில் இருந்து காப்பாற்றினார். அதனால் கணேஷூக்குக் கொடுக்கலாம். ஆனால் கணேஷூக்கு கொடுத்தால் அவர் தனக்கு டஃப் கொடுக்கக்கூடிய போட்டியாளராக இருப்பார் அதேசமயம் சுஜாவை எளிதில் வெல்லமுடியும் என்று ராஜதந்திரமாக யோசித்து சுஜாவிற்கும் தனது பாயின்ட்ஸைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில்தான் கணேஷூம், சுஜாவும் சிநேகனை கன்வின்ஸ் செய்யவேண்டும்.  ’தகுதியான ஒருவருக்குத்தான் அந்த பாயின்ட்ஸை கொடுக்கணும். ஒருமுறை எனக்கு யாரைக் காப்பத்தணும்னு வந்தப்போ நீங்க தகுதியானவர்னுதான் உங்களைக் காப்பாத்தினேன்.’ என்று தான் செய்த உதவியை மிக நாசூக்காக சிநேகனுக்கு நினைவூட்டினார் கணேஷ். ’90 நாளுக்கு மேல உங்களோட ட்ராவல் பண்ணிருக்கேன். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்குத் தெரியும்’ என்று தான்தான் சிநேகனுடன் முதல்நாளில் இருந்து உடனிருப்பதையும் சுஜா நடுவில்தான் வந்தார் என்பதையும் போகிற போக்கில் போட்டுவிட்டார். ’நீங்க எல்லா கரெக்டான டெசிசன் எடுப்பீங்கனு நம்புறேன்’ என மிக நேர்த்தியாக நெய்யப்பட்ட தனது உரையை முடித்தார். இதை உடைத்து இன்னும் ஸ்ட்ராங்காக தன் வாதத்தை வைக்கவேண்டிய இடத்தில் இருந்தார் சுஜா. ’இந்த வீட்டுக்குள்ள முதல் பழகுனது உங்ககிட்டதான். கம்மியான நாட்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உண்மையாதான் இருந்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னது திரும்பவும் புலம்பல்களாகவே இருந்தது. நேர்மையாக இருந்தது.. டாஸ்க்கை சீரியஸாக எடுத்து செய்தது என்று தனக்கு இருக்கும் தகுதிகளைப் பட்டியலிட்டார். மீண்டும் தான் அதிக வலிகள் பெற்றதாகக் கூறினார். என்னதான் சொன்னாலும் அவரின் வாதம் தராசுத் தட்டில் கனமின்றி தொங்கிக்கொண்டிருப்பதாகவே பட்டது. இருவரில் யாருக்கு அந்த மதிப்பெண்ணைக் கொடுத்தாலும் நட்பு அப்படியேதான் தொடரும் என்று இருவருமே உறுதியளித்தார்கள். 

ஏற்கெனவே குழம்பியிருந்த சிநேகனை இருவரின் வாதமும் இன்னமும் குழப்பியிருக்கும். தன் கையில் இருக்கும் லகான் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்த சிநேகன், இன்னும் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் என்றும், பிக்பாஸிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றும் கூறினார். பின்பு வாக்குமூல அறைக்குச் சென்று ‘இந்த மதிப்பெண்களை நான் யாருக்கும் கொடுக்காமலும் இருக்கலாமா?’ என்று தன் சந்தேகத்தைக் கேட்க, அவர் ‘உங்கள் மதிப்பெண் உங்கள் முடிவு’ என்று பாலை அவர் பக்கம் திருப்பிவிட கன்பஷன் ரூமில் இருந்து கன்ஃப்யூசனுடன் வெளியே வந்தார். ஏற்கெனவே இவருக்குக் கொடுக்கலாமா அவருக்குக் கொடுக்கலாமா என்ற இரண்டில் எதைத் தொடலாம் எனக் குழம்பிக் கொண்டிருந்தவருக்கு இப்போது யாருக்கும் கொடுக்காமல் தானே வைத்துக்கொள்ளலாமா என்று மூன்றாவதாக ஒரு குழப்பமும் சேர்ந்துகொண்டது.

கமல்

படுக்கையறையில்  சுஜா தனிமையில் அமர்ந்திருக்க.. பிந்து அவரிடம் எதையோ கொடுத்துச் சென்றார்.. (முன்பு சுஜா பிந்துவுக்குக் கொடுத்த கிஃப்டைத்தான் இப்போது பிந்து திருப்பிக் கொடுத்தார் என்பதை பின்பு சுஜா கமலிடம் பேசும்போது குறிப்பிட்டார்).

**
வெள்ளுடை வேந்தராக கமல் அரங்கத்திற்கு வந்தார். ஒரு டஜன் ஞாயிறுகளை சந்தித்துவிட்டோம். இது 13 வது ஞாயிறு.. இதுக்கப்பறம் ஞாயிறு கிடையாது என்று சொல்லி நிறுத்தி அந்த ஞாயிறைச் (சூரியனை) சொல்லல என்று மேல்நோக்கி கையைக் காட்டினார். அகம் டிவி வழி ஹவுஸ்மேட்ஸூடன் பேசலாம் என்று சொல்லி மேஜிசியன் போல விரல்களை ஆட்ட, லிவிங் ஹாலில் இருக்கும் டிவியில் கமல் தோன்றினார். தானே வைத்துக்கொள்ளலாம் என்ற சிநேகனின் சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் தனது பேச்சைத் தொடங்கினார் கமல். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த உதாரணம் மிகப்பொருத்தம்.  ‘நீங்கள் தரப்போவது கர்ண கவசத்தை அல்ல.. அந்த பாயின்ட்ஸ் உங்களுக்கு கவசமாக இருக்கப்போவதில்லை. அதனால் இதை யாருக்காவது கொடுப்பதால் எந்த உங்களுக்கு பாதகமும் இல்லை’ என்று விளக்கினார்.  உதாரணங்கள் சொல்வதில் கமலை மிஞ்ச ஆள் இல்லை.   அதற்கு உதாரணங்களாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ‘நான் ஏசி ரூம்ல இருக்குற ஃபேன் மாதிரி’ வசனம். அன்பே சிவம் படத்தில் ‘கதிர் அறுத்ததும் அருவாளைத் தூக்கி ஓரமா வச்சிடுவோம் ஆணியடிச்சதும் சுத்தியலையும் அதைதான் செய்வோம் நானும் அதுமாதிரி ஒரு கருவிதான்’ என்ற வசனங்களைக் குறிப்பிடலாம். இந்த விஷயத்தில் கமல் ஒரு ‘உதாரண புருஷர்’ (அப்படி சொன்னால் அடிக்க வருவாய்ங்களோ!?).

சுஜா

சிநேகன் தனது மதிப்பெண்களை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று மற்றவர்களிடம் கருத்துக் கேட்டார். ஹரீஷைத் தவிர அனைவரும் கணேஷையே சொன்னார்கள். ஹரீஷ் மட்டும் சுஜாவின் பெயரைச் சொன்னார். ஓவர் டூ சிநேகன். முன்பு கணேஷ் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிநேகனை எவிக்சனில் இருந்து காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். அதோடு ஒரு டாஸ்க்கில் சோப்பு நுரையை தெரியாமல் அவர் கண்களில் ஊற்றிவிட தனக்காக அதைப் பொறுத்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு காரணங்களுக்காக தன் பாயின்ட்ஸைக் கணேஷூக்குத் தருவதாகச் சொல்ல அரங்கத்தில் கைதட்டல் வெகுநேரம் ஒலித்தது. சரியான நேரத்தில் செஞ்சோற்றுக்கடன் தீர்த்துக் கொண்டார் சிநேகன். கணேஷ், என்றோ செய்த ஒரு உதவி இப்போது தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியில் இருந்து தன்னை விடுவிக்கும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். (நிஜமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாழ்க்கைக்கான பாடம் கிடைக்கும்போல).

அதோடு சுஜாவை தான் அவாய்ட் பண்ணவில்லை என்று ஆறுதல் சொன்னதோடு ‘கவிதாயினி’ என்று சொல்லி வலியில் இருக்கும் சுஜாவுக்கு  ’ஐஸ்’ ஒத்தடம் கொடுத்தார். சுஜா ’இது நியாயமான தீர்ப்புதான். கணேஷ் இதற்குத் தகுதியானவர்தான்’ என்று ஒத்துக்கொண்டார். ’வருத்தம் உண்டா?’ என்று கமல் கேட்டதற்கு ‘அடிபட்டா வலிக்கும்தானே சார்’ என்று மீண்டும் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார்.சிநேகன் கணேஷூக்கு மதிப்பெண்களைக் கொடுத்ததற்காக அவர் சொன்ன காரணத்தை போட்டியாளர்கள் அனைவரும் 100 சதவீதம்  ஏற்றுக்கொண்டார்கள். இன்னொரு தருணத்தையும் சிநேகன் நினைவுபடுத்தினார். அது ஆரவ் சின்ன பிக்பாஸாக இருந்தபோது தன்னை எவிக்சனில் இருந்து காப்பாற்றியதால் தான் பிந்துவையோ.. ஆரவ்வையோ நாமினேட் செய்யவேண்டிய நிலையில் ஆரவ்வை நாமினேட் செய்யாமல் இருந்ததை எடுத்துரைத்தார். எனக்குத் தெரிஞ்ச நியாயத்தை நான் செய்கிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் சிநேகன். (இனி மக்கள் ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் பிரச்சார தொனியில் பேசுகிறாரோ என்றும் தோன்றியது). 

சுஜா

கமல் சுஜாவுக்கு தங்கள் செய்திகளை பகிர்ந்துகொள்ளும்படி போட்டியாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஆரவ் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று ஒரே வார்த்தையில் முடித்தார். இந்த வாரம் முழுக்கவே சுஜாமீது பயங்கர வெறுப்பைக் காட்டிவந்தவர் வேறு என்ன சொல்வார்? ’அவசரத்தைக் குறைங்க’ என்று சிநேகன் அட்வைஸ் வழங்கினார். ’க்ல்யாணத்துக்கு கூப்பிடுங்க’ என்று கணேஷூம் பிந்துவும் கேட்டுக்கொண்டார்கள். ஹரீஷ் மட்டும் அவரை மிஸ் பண்ணப்போவதாகச் சொன்னார். சுஜாவுக்கு கண்கள் துளிர்த்தது. 
சுஜா டாஸ்க்குகளை சிறப்பாக செய்ததற்காக கமல் பாராட்டினார். ’இது தோல்வியில்ல.. வெற்றிக்குக் கிட்ட வந்துட்டிங்க.. வாசனை வந்துடுச்சு அடுத்தமுறை டேஸ்ட் பண்ணிடலாம்’ என்று சமாதானப்படுத்த முயன்றார். அப்போதும் சுஜா அழுமூஞ்சி லுக்கிலேயே இருக்க.. ’இன்னும் கூட உங்களை சிரிக்க வைக்கணும்னா.. வெளில போய் யாரைப் பார்க்கணும்னு ஆவலா இருந்தீங்களோ அவங்களைப் பார்க்க போறீங்க’ என்றார். அப்படிச் சொன்னாலாவது உற்சாகமாவாரா என்று பார்ப்பதற்காகச் சொன்னார்.. ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையா ’இல்ல சார் 100 நாள் முடியுற வரைக்கும் அவரைப் (அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறவரை) பாக்கப்போறதில்லை’ என்று மீண்டும் சோக மூடுக்கு போனார்.
பிறகு சம்பிரதாய நிகழ்வுகளான போர்டில் எழுதுவது, செல்ஃபி எடுப்பது போன்றவை அரங்கேறியது. போர்டில் அழுவது போல் கண்கள் வரைந்தார் சுஜா. ஆனந்தக் கண்ணீர்தானாம். எவரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், அட்வைஸ்களை அள்ளித் தெளிக்காமல் குறுகிய நேரத்தில் வெளியேறினார். 
**

’எனக்கென்னமோ திரும்ப வந்துடுவாங்களோனு தோணுது’ என்றார் சிநேகன். ஆமாம் ஏற்கெனவே இப்படித்தானே வெளியேறி சீக்ரெட் ரூமில் வைத்திருந்து ஒருநாள் கழித்து மீண்டும் உள்ளே அனுப்பினார்கள். ஆனால் இறுதி வாரத்தை எட்டிவிட்ட நிலையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. சிநேகன், கணேஷ் பெயரைச் சொன்னபோது மக்களிடம் கிடைத்த வரவேற்பால் தான் எடுத்த முடிவு சரியானதுதான் என்று மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று திருப்திபட்டுக்கொண்டார். சுஜா இங்க இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க அதனால தான் அவங்க பெயரைச் சொன்னேன் என்று ஹரீஷ், கணேஷிடம் விளக்கினார். ஹரீஷ் செய்ததும் சரிதான் ஒருவர்கூட தனக்கு சாதகமாக பேசவில்லை என்றால் இன்னும் உடைந்துபோயிருப்பார் சுஜா. கணேஷூம் அதைப் புரிந்துகொண்டு வரவேற்றார். முதல் தடவை அவங்க எவிக்ட்னு சொன்னப்போ எப்படி அழுதோம் இப்ப யாருமே ஃபீல் பண்ண மாதிரியே தெரியலையே என்று பேசிக்கொண்டார்கள். ஹரீஷூக்கு கண்கள் கலங்கியது. இந்த வார டாஸ்க்குகள்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்காமல் போன காரணமோ!?

சுஜா

**
மீண்டும் மேடைக்கு வந்த கமல், சுஜாவை அழைத்தார். அவருக்கும் சுஜாவுக்குமான உரையாடல் தொடங்கியது. ’பிக்பாஸ் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?’ என்று ஏற்கெனவே 10 முறைக்கு மேல் கேட்ட அதே கேள்விதான் இவருக்கும் முதல் கேள்வி. வித்யாசமான பல கேரக்டர்களைச் சந்தித்ததாக, நேர்மையான மனிதர்களைச் சந்தித்ததாக தனது அனுபவங்களைப்   பகிர்ந்துகொண்டார். இப்போது வரை யாரையும் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை. இன்னும் குழப்பமாகத்தான் இருப்பதாகச் சொன்னார். மனிதர்கள் என்ன கணித சூத்திரங்களா அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள?. பிக்பாஸ் பாத்துட்டு யார் யார் எப்படினு தெரிஞ்சுகிட்டுதான் உள்ளே போனேன் ஆனா உள்ளே போனா எல்லாம் வேற மாதிரியா இருக்கு.. என்றார். யாருக்குமே இங்க நிலையான கேரக்டர் இல்ல... ஒரு நாள் மண்டே ஒருநாள் ட்யூஸ்டேங்குறமாதிரி கேரக்டரும் ஒவ்வொருநாளும் மாறும் என்று அடுத்த தத்துவத்தை அள்ளித் தெளித்தார் (தலையில எவ்ளோ முடி இருக்கோ அவ்ளோ தத்துவம் சொல்லிட்டீங்க மேடம்).
சுஜா ஓவியாவைப் போல் நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்ற விமர்சனம் அவரை வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது. ஒருத்தரோட இடத்துல  நான் இருக்குறேன்னா அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது என்று தெளிவுபடுத்தினார். கார் டாஸ்க், பலூன் உடைக்கும் டாஸ்க்குகளில் தான் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்துகொண்டார். அந்த டாஸ்க்கில் சிநேகன் நேர்மையாக விளையாடவில்லை என்று புகார் வாசிக்க, ‘அப்போ வீட்ல யாராவது ஏமாத்துறாங்களானு நான் கேட்டப்போ ஏன் அவர் பெயரைச் சொல்லல?’ என்று மென்மையாக கடிந்துகொண்டார் கமல். ’வீட்டுல ஒருநாள் கூட நிம்மதியா தூங்குனதில்ல... பிக்பாஸ் வந்த முதல் நாள்தான் நிம்மதியா தூங்குறேன்’ என்று மீண்டும் வயலின் வாசித்தார். 

கமல்

**
ஆடியன்ஸ் கைகளில் மைக் தரப்பட்டது. ’பேய்னா பயம்னு சொன்னீங்க ஆனா கோல்டன் டிக்கெட் டாஸ்க்ல இருட்டுல தைரியமா தேடுனீங்களே?’ சொல்லு லதா... அதெல்லாம் நடிப்பா என்று முதல் பாலிலேயே அட்டாக்கை ஆரம்பித்தார்கள். ’அப்பவும் பயமாதான் இருந்தது கமல்சார் தைரியமா இருக்கணும்னு சொன்னதால செத்தாலும் பரவாயில்லனு பண்ணேன்’ என்றார். அடுத்த கேள்வி க்ரூப்பிசம் பற்றி வந்தது.  ‘ கணேஷூக்கும் உங்களுக்கும் மட்டும்  பாயின்ட்ஸ் வர்றமாதிரி டாஸ்க் பண்ணீங்களே.??’ என்று கேட்க, ‘நானே அவர் முட்டைய எப்படி உடைக்கலாம்னுதாங்க பாத்துட்டு இருந்தேன்’ என்றார். (அடி பாதகத்தி..!).
அடுத்த கேள்வி இன்னும் ஃபோர்ஸாக வந்தது. ‘ரொம்ப சுயநலமா இருக்கமோனு தோணலையா?’ என்றார் ஒருவர் கேட்க, ’அதுல தப்பில்லையே’ என்று சுஜா சொல்ல.. ’அதனாலதான் எவிக்ட் ஆகி இங்க இருக்கோம்னு தோணலையா?’ என்று மீண்டும் இன்னொரு அஸ்திரத்தை எய்தினார். உங்க பார்வைக்கு அப்படித் தெரியுது என்று ஆனா நான் செல்ஃபிஷா இல்ல என்று மழுப்பினார். சீக்ரெட் ரூம் எக்ஸ்பீரியன்ஸ், கார் டாஸ்க் என மாற்றிமாற்றி கேட்ட கேள்விகளுக்கு தனக்கு தோன்றிய பதில்களைச் சொன்னார். " உங்கள மாதிரி அங்க இருந்த எந்த பெண் போட்டியாளர்களும் போராடுனது இல்ல. உங்க போராட்டத்திற்கான பாதை தான் தப்போன்னு தோணுது. அத மட்டும் மாத்திக்கிட்டீங்கன்னா, வெற்றி உங்கள் வசம்" என்றார் ஒருவர். அதை சுஜாவும் ஆமோதித்தார். இனியாவது சுஜாவுக்கு புரியும் என நம்புவோமாக.
உண்மையாக இருப்பவர் யார் என்ற கேள்வி வந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் நல்லா இருக்காங்க டாஸ்க் பண்ணும்போது மட்டும் அவங்களோட வேற முகம் வெளிப்படுது என்றார் சுஜா. இது பிக்பாஸூக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒருவருடைய நெகட்டிவிட்டி அப்போதுதான் வெளிப்படும். கமல் இதைத் தெளிவு படுத்தினார். ‘உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம். நான் டைரக்ட் பண்ணும்போது இப்போது இருக்குற மாதிரி இப்படியே இருக்கமாட்டேன். அதுக்காக அது வேற முகம் இல்ல.. வேற கடமை.. வேற நிலை’ என்றார். ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம். ஒரு சமயம் பிந்துவை ஏமாற்றி ப்ராங்க் செய்ததற்காக வருத்த ப்பட்டு ’ஸாரி’ என்று எழுதி அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுத்ததையும் அதை கிளம்பும்போது திருப்பிக் கொடுத்துவிட்டதையும் எண்ணி வருத்தப்பட்டார். பிடிக்கவில்லையென்றாலும் கூட அந்த கிஃப்டை பிந்து திருப்பித்தராமல் இருந்திருக்கலாம். ஆரவ், சிநேகன் இருவருக்கும் வெற்றிவாய்ப்புகள் இருப்பதாகச் சொல்ல அரங்கத்தில் கைதட்டல்.

‘100 நாள் முடிஞ்சப்பறம்தான் வீட்டுக்கு போவேன்னு சொல்றீங்க.. தோத்துட்டமேன்னு நினைக்குறதாலயா? தோல்வியை தைரியமா கொண்டு போற இடம் அன்பு இருக்குற இடம்தான். கஷ்டப்பட்டு எடுக்குற படம் தோத்துப் போச்சுனா மேடைல சொல்லி கவலைப்பட மாட்டேன். யார் என் மேல கரிசணமா இருக்காங்களோ அவங்ககிட்ட சொல்லுவேன்’ என்று தன் வாழ்க்கை அனுபவங்களைச் சுஜாவுக்கு சொல்லிக் கொடுத்தார் கமல். வெளில இருந்து நிகழ்ச்சிய பாத்துட்டு இருந்திருப்பீங்க ஆனா இந்த மேடைல வந்து நின்னுட்டு இருக்கீங்க இதுவே பெரிய வெற்றி இல்லையா? சுஜாவுக்காக கைதட்டுங்கனா இவங்க தட்டப்போறாங்க என்று கேட்டுவாங்கிய கைதட்டை சுஜாவுக்கு டெடிகேட் செய்தார். கைத்தட்டலின் போது, சுஜா தன்னையறிமால் அழ அதைத் தான் நடித்த சலங்கை ஒலி படத்தின் காட்சியோடு ஒப்பிட்டது அருமை. படத்தின் இறுதிக் காட்சியில், தன் வாழ்நாள் எல்லாம் மேடையில் ஜொலிக்க நினைத்த நாயகன், சக்கர நாற்காலியில் வருவான். அரங்கம் நிறைந்த அந்த இடத்தில் கைத்தட்டல்களை முதல்முறையாக அனுபவிப்பான் நாயகன். அவனுக்கு வெற்றியின் ருசி இறக்கும் தருவாயில் தான் கிடைக்கும். மேலும் மேலும் தட்டுங்கள் என அவனது கைகள் தன்னையுமறியாமல் அசைக்கும். சமீபத்தில் சலங்கை ஒலி படத்தின் இயக்குநர் விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்த போதும், தனக்கு மிகவும் பிடித்த இந்த காட்சியை பகிர்ந்து கொண்டார் கமல். ஒரு கலைஞனாக கைத்தட்டலுக்கு ஏங்கும் மனம் அது என்பதை கமல் விளக்கினார். கமலின் கண்களும் கலங்கி இருந்தது. இந்த கைத்தட்டலுக்கு இருக்கும் மதிப்பு காசுக்கு கிடையவே கிடையாது. இதற்காக பொறாமைப்படும் கலைஞர்கள் வெளியில் காத்துக்கிடக்கிறார்கள் என்றார் கமல். அது ஒருவகையில் உண்மை தான். 

சுஜாவுக்கான குறும்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அவர் அந்தரத்தில் பறந்துவந்து இறங்கியதைப் பார்த்து அடப்பாவிகளா இவ்ளோ உயரத்துலயாடா தொங்கவிட்டீங்க என்று ஆச்சர்யப்பட்டார். ஹவுஸ்மேட்ஸ் அவரை ராகிங் செய்த காட்சிகள், கவிதை சொன்ன காட்சிகள், (அவர் கவிதையைக் கேட்டு அவரே தலையில் கைவைத்துக்கொண்டார்... ஹைய்யா ஊருக்குள்ள கவிஞர்கள் எண்ணிக்கைல ஒண்ணு குறைஞ்சது). அடுத்ததாக சுஜா தன் அப்பாவுக்காக அழுத காட்சிகளையெல்லாம் பனித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்க, ‘உங்கப்பா வரலைனா நான் வர்றேன்’ என்று கமல் சொன்னதை மீண்டும் பார்த்தபோது அதுவரை அடைபட்டிருந்த கண்ணீர், அணை உடைத்து வெளியேறியது. 
சுஜா பிக் பாஸ் வீட்டில் குக்கிங்கில் இருந்து க்ளீனிங் வரை சுறுசுறுப்பாக வேலை செய்தார். கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சவாலாக ஏற்று செய்தார். ஆனால் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறார். அப்பாவுக்காக அழுதால் ஓக்கே.. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம்கூட அழுததுதான் அவரை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து அந்நியமாக்கியது. நிறைய அழுவதாலேயே கூட அவரை ஃபேக் என்று பிறர் நினைத்திருக்க வாய்ப்புண்டு. சுஜா, சிநேகனுக்கு ’அழுமூஞ்சி’ என்று சர்டிஃபிகேட் கொடுத்தபோது கமல்கூட ‘வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ என்று கலாய்த்தார். இனியாவது சோகக் காரில் இருந்து கீழே இறங்குங்கள் சுஜா. டாஸ்க்கிற்காக உடல் முழுக்க மைதா மாவை பூசிக் கொண்டு சுற்றினீர்கள் இனி வாழ்க்கைக்காக மனம் முழுக்க பாசிட்டிவிட்டியை பூசிக் கொண்டு சுற்றுங்கள். திருமண வாழ்த்துகள் சுஜா..!

சுஜா

விடைபெறும் முன், ‘என் கல்யாணத்துக்கு வாங்கப்பா’ என்று கமலை அழைக்க... அவரும் வருவதாகக் கூறி வழியனுப்பிவைத்தார்.
**

அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியாம். அடுத்தமுறை உங்களை இந்த மேடையில்தான் சந்திக்கப் போகிறேன் என்று போட்டியாளர்களுக்குக் கூறினார் கமல். அந்த வெற்றி விழாவிற்கு நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும். ஒருவர் சனிக்கிழமையோ அல்லது அதற்குமுன்போ வெளியேற்றப்படுவார். ஹைய்யா அடுத்தவாரம் வீட்டுக்குபோறோம் என்று குஷியானார் ஆரவ். போனவாரம் மாதிரியே இந்தவாரமும் மண்டே டாஸ்க் கொடூரமா இருக்கப்போகுது பாத்துக்கோங்க என்று அலர்ட் மோடில் இருந்தார் ஹரீஷ். அப்படியெல்லாம் இருந்தா ஃபைனல்ஸூக்கு நொண்டி நொண்டிதான் போகணும் என்று நடித்துக்காண்பித்தார் சிநேகன்.
இனி நாம் போடப்போகும் ஓட்டுகள் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுகள் என இன்றும் நினைவூட்டினார் கமல். ’வெற்றியாளர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசித்து முடிவு செய்யுங்கள்.. சூழ்ச்சிக்கா, நேர்மைக்கா.... கடின உழைப்புக்கா... தியாகத்துக்கா.. வெற்றியாளரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற விதத்தில்தான் உங்களின் தரம் அமையும். உங்கள் தேர்வு உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. ஓட்டு விளையாட்டெல்லாம் இனி விளையாடமுடியாது’ என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார். அடுத்து என்ன சொல்லியிருப்பார்.. அதேதான்.  ‘என்ன ஒரு மாதிரி பாக்குறீங்க நான் இந்த மேடையைச் சொல்லிட்டு இருக்கேன்’ என்றார்.

பிக் பாஸ் தமிழ்

கமல் சாதுர்யத்தின் முதல்வர்.

- தி. விக்னேஷ்

 


Add new comment

Or log in with...