2000க்கும் அதிகமான மது விற்பனை முகவர்கள் நிதி மோசடி பிரிவினால் விசாரணை | தினகரன்

2000க்கும் அதிகமான மது விற்பனை முகவர்கள் நிதி மோசடி பிரிவினால் விசாரணை

 மதுசார விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பினாமிகளாக செயற்படும் 2000ற்கும் அதிகமான மதுபான விற்பனை முகவர்கள் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் எப்-எல்-4 அனுமதிப்பத்திரம் பெற்று செயற்பட்டுவரும் 2000ற்கும் அதிகமான மதுபான விற்பனை முகவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலொன்றை கலால் திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளது.

ஒருசிலர் மதுசார சந்தையின் மொத்த மற்றும் சில்லறை

விற்பனையினைத் தீர்மானிப்பதாகவும், அவர்கள் சிறிய முகவர்களிடமிருந்து குறைந்த பணத்தில் மதுபான நிலையங்களைக் கொள்வனவு செய்து விடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரம் 5 இலட்சம் ரூபாவுக்கு மாற்றப்படுகிறது. ஒரு நபர் மூன்று அனுமதிப் பத்திரங்களை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அரசியல் வாதிகள், மதுசார விற்பனையாளர்கள், மதுபானசாலை நடத்துபவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் பினாமிகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு மதுபான சாலைகளை நடத்தி வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இரண்டு முன்னாள் கபினட் அமைச்சர்கள் பெரும் எண்ணிக்கையிலான மதுசார உற்பத்தியுடன் தொடர்புபட்டிருந்தனர்.

இந்த வருட ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை பிழையாகப் பயன்படுத்தியமைக்காக 21 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தது. குறித்த நபர் அமைச்சரின் பங்குதாரராக செயற்பட்டதுடன், அமைச்சரே நிறுவனத்தின் உரிமையாளராகக் காணப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் தெமட்டகொட பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மதுசாரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. 

 


Add new comment

Or log in with...