25 ஐ. ம. சு. முன்னணி வேட்பாளருக்கு எதிராக போதைப் பொருள் குற்றச்சாட்டு | தினகரன்

25 ஐ. ம. சு. முன்னணி வேட்பாளருக்கு எதிராக போதைப் பொருள் குற்றச்சாட்டு

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுபவர்களில் 25 வேட்பாளர்களுக்கு எதிராக போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘கள்வர்கள்’ என்பதற்கு புதிய அர்த்தம் கண்டு பிடித்துள்ளார்.

‘சிறந்த ஆட்சியாளன்’ என கள்வர்களுக்கு அர்த்தம் கண்டுபிடித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ ‘கள்வர்களுக்கு’ வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒன்பது வருடங்கள் நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளரிடமிருந்தே இவ்வாறான கருத்துக்கள் வருகின்றன. மக்கள் இந்தக் கருத்துக்களை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கள்வர்கள் மற்றும் மோசடிக் காரர்கள் என பெயரிடப்பட்டுள்ளனர், அவ்வாறானவர்கள் மஹிந்தவுடன் இணைந்துகொண்டு ஐ.ம.சு.மு மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர். இது சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியை காட்டுவதுடன் அக்கட்சியின் வாக்கு வங்கியிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பு இருப்பதால் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியில் எந்தவொரு வேட்பாளருக்கு எதிராகவும் போதைப் பொருள் அல்லது எதனோல் வியாபாரிகள் என்ற குற்றச்சாட்டு இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக காணப்படும் சவால் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்படுகின்றன.

முதலாவது இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை விடயங்கள். தருஸ்மன் அறிக்கையில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் சிங்கள சமூகங்களின் மனங்களை வென்று நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, சர்வதேச பங்குதாரர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள். யுத்தம் முடிந்த பின்னர் வணக்கஸ்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கைதிகளின் படுகொலை என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இதுதொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும், அரசாங்கம் மாறியதன் பின்னர் சர்வதேச தரப்பிடமிருந்து சாதகமான பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். சட்டத்தின் சுயாதிபத்தியம், பொதுமக்கள் சேவை மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களில் எமது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றமை இதற்குக் காரணமாகும். எனவே சர்வதேச அரங்கில் காணப்படும் சவாலை சமாளிப்பது கஷ்டமானது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரங்களுக்காக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 141 மில்லியன் ரூபா பணத்தை அப்போது அமைச்சராகவிருந்த விமல் வீரவன்ச துஷ்பிரயோகம் செய்தமையால் காலி மற்றும் வத்தளையில் அமைக்கப்பட்டுவந்த நீதிமன்றக் கட்டடத்தொகுதிகளின் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமான விமல் வீரவன்ச போன்றவர்களுமே காரணம். அவர்கள் மக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையே இதற்கான காரணமாகும் என்றும் கூறினார்.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் 400 தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் இதனூடாக ஒவ்வொன்றிலிருந்து 2000 முதல் 3000 வரையான புதிய வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாணத்தில் தன்னால்தான் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டதாக கூறிவரும் மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் அமைச்சர் சவால் விடுத்தார்.


Add new comment

Or log in with...