இன, மதவாதங்களை தூண்டி சமூகங்களை குழப்பும் அராஜக நிலைமை இனி ஏற்படாது | தினகரன்


இன, மதவாதங்களை தூண்டி சமூகங்களை குழப்பும் அராஜக நிலைமை இனி ஏற்படாது

 இன, மத வாதங்களை தூண்டி சமூகங்களிடையே குழப்பம் பதற்றங்களை ஏற்படுத்தும் அராஜக நிலைமைக்கும் ஐ.தே.க.மு. அரசாங்கத்தில் இடமிருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் (24) அக்குறணை நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் ஐ.தே.க.வினது அமைப்பாளரும் அமைச்சருமான எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது நல்லாட்சிக்கான 06 மாத வேலைத்திட்டத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தினோம்.

நாட்டில் நாம் பல்லின மக்கள் வாழ்கின்றோம். தனித்து ஒரு இனத்தினாலோ ஒரு மதத்தினாலோ ஆட்சியொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஆகவே அனைவரும் இணைந்தே ஆட்சியை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.

தன்னை ஒரு போதும் வீழ்த்தி விட முடியாது. எவரும் பதவியிலிருந்து என்னை இறக்கிவிட முடியாது. சிங்கள மக்கள் எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என மஹிந்த தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். நடந்தது என்ன கடந்த எட்டாம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்.

நாம் நினைத்ததை செய்து காட்டினோர். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஆக்கி அராஜகங்களை ஒழித்துக்காட்டி நாட்டை பாதுகாத்து மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஒன்றை உருவாக்கும் பொருட்டு நல்லாட்சியை உருவாக்கினோம். அதில் பல சேவைகளை செய்துள்ளோம்.

இவ்வாறு இருக்கும் இந்த நிலையில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ளார். இது நகைப்புக்குரியதா? இல்லையா?

இவருடைய நோக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் வரவேண்டும் என்பதுதான்.

கடந்த காலங்களில் மஹிந்தவுக்கு வாக்களித்த எவரும் இம்முறை அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். மேலும் இவருடைய கட்சி தற்போது இரண்டு மூன்றாக பிரியப்பட்டுள்ளது.

ஒரு சாரார் தமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால எனவும் இன்னும் ஒரு பிரிவினர் மஹிந்த ராஜபக்ஷ எனவும் மேடையில் பிரசாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஒரு போதும் பிரதமர் பதவி வழங்கமாட்டேன் என தெட்டத்தெளிவாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். எங்களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ள நிலையில் எவரும் மஹிந்தவை பிரதமராக்க முன்வரப் போவதில்லை.


Add new comment

Or log in with...