வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையவில்லை | தினகரன்

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையவில்லை

 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த வாக் குறுதிகளை முன் னெடுக்கும் வகையில் ஐ. தே. க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைக்கப் படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அது அமையவில்லை என ஐ. ம. சு. மு. குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்களை ஏமாற்றும் வகையிலே விஞ்ஞாபனம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐ. ம. சு. மு. தலைவர்கள் அதில் பல முக்கிய துறைகளுக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, வாசுதேவ நாணயக்கார, ரஜீவ விஜேசிங்க மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சகுந்தலா சகலசூரிய ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியதாவது, ஐ. தே. க. தேர்தல் விஞ்ஞாபனம் 60 வருடத்தில் நிறைவேற்றப்படக்கூடியது. மக்களை உளவியல் ரீதியாக ஏமாற்றும் திட்டமே இது. மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குவதாக கூறிய ஐ. தே. க. இம்முறை ஒரு வீதத்தை விட கூடுதலாகவே ஒதுக்கியது. ஐ. தே. க. ஆட்சிகளில் கல்விக்கு ஒதுக்கும் தொகை குறைக்கப்பட்டது. ச. தொ. ச. வை கம்பனியொன்றுக்கு வழங்க ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்தார். சதொச வளங்களை விற்றார். லிட்ரோ கேஸ் நிறுவனத்தை மீள செல் கம்பனிக்கு வழங்க தயாராகின்றனர். பொரு ளாதாரத்தை காட்டிக் கொடுப்பதை தான் ஐ. தே. க. எல்லாக் காலத்திலும் செய்கின்றது. ராஜித, சம்பிக போன்றோர் என்ன கூறினாலும் அவர்கள் ஐ. தே. க. வயிற்றுக்குள்ளே உள்ளனர்.

கற்கண்டுக்கு மயங்கி அரச உத்தியோகத்தர்கள் ஐ. தே. க.வுக்கு ஏமாறக்கூடாது. ஐ. தே. க. ஆட்சியிலே அரச துறை குறைக்கப்பட்டது.

ஐ. தே. க.வினர் டிரைலர் தான் கட்டியுள்ளனர். அதில் கற்கண்டே இருக்கிறது. முழுப் படத்தை காட்டினால் உண்மை புலனாகும்.

கடந்த 6 மாத காலத்தில் ஒரு மலசல கூடம் கூட நிர்மாணிக்கப்படவில்லை. ஒரு இலட்சத்துக்கும் மேல் வேலையிழந்துள்ளனர். கன்னத்தில் அறையும் வகையில் மக்கள் ஐ. தே. கவுக்கு பதிலளிப்பர்.

நாம் மின் கட்டணத்தை 25 வீதத்தினால் குறைத்த போதும் ஐ. தே. க. ஆட்சியில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஐ. தே. க. ஆட்சியில் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரச, தனியார் ஊடகங்கள் ஐ. தே. க.வுக்கு சார்பாக உள்ளன. ஊடகங்களை ஐ. தே. க. குத்தகைக்கு பெற்றுள்ளது. எமக்கு எதிரான மோசடி, திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரம் எதுவும் முன்வைக்கப் படவில்லை. சந்தேகம் மட்டுமே முன்வைக்கப்படுகிறது.

ஐ. தே. க. ஆட்சியில் நடந்த பாரிய மோசடியை நாம் வெளிப்படுத்தினோம். மத்திய வங்கி திறைசேரி முறி மோசடியுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளது. அவரும் அதில் குற்றவாளியாவார். ஐ. தே. க. விஞ்ஞாபனத்தில் சமூக மேம்பாடு, சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. ரணில் விக்ரமசிங்க என்பது எமக்கு தெரிந்த அதே பழைய நபரே. அவர் ஜே. ஆர் இன் ஆவியாகும் என்றார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன. தேயிலை, இறப்பர், பால்மா, அரிசி என்பவற்றுக்கு வழங்குவதாக உறுதியளித்த உத்தரவாத விலை எங்கே? அன்று முதல் இன்று வரை பொய்யை மட்டுமே கூறினர். பிரதமர் தலைமையிலான அரசுக்கு தெளிவான நோக்கமோ தொலைநோக்கோ கிடையாது. கோப் அறிக்கையை வெளியிட இடைக்கால தடை பெற்றதன் மூலம் தமது தவறை மறைக்க முயன்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் அதிக அன்பு செலுத்துகின்றனர். அவரை அன்பாக கையை பிடிக்கின்றனர். குடிபோதையில் உள்ள நபர் கையை நசுக்கினால் தள்ளிவிடுவதை பெரிய தவறாக சேறு பூசுகின்றனர் இது நகைப்புக்குரியதாகும்.

படலந்த குறித்து குற்றச்சாட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினூடாக தவறு செய்தோரை பிடிப்பதாக கூறி பழிவாங்கினார். போஷாக்கு பொதி வழங்குவதாக கூறி ரோஸி சேனநாயக்க கர்ப்பிணி தாய்மாரை ஏமாற்றினார்.

முன்னாள் எம்.பி. ரஜீவ விஜேசிங்க

நல்லாட்சி தொடர்பான வாக்குறுதியில் 19 ஆவது திருத்தம் தவிர்ந்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஐ. தே. க. அவற்றை தடுத்தது. தகவல் அறியும் சட்டம் குறித்து ஐ. தே. க. பேசினாலும் பிரதி நீதி அமைச்சர் கோப் குறித்து தகவல் அறியும் உரிமையை நீதிமன்ற தடை உத்தரவின் மூலம் தடுத்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கவே ஐ. தே. க. முயன்றது. ஆனால் ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்கவே நாம் முயன்றோம். தேர்தல் முறையை மாற்ற ஐ. தே. க. சற்றும் முயலவில்லை.

ஐ. தே. க. விஞ்ஞாபனத்திலுள்ள அனைத்தும் பொய் வாக்குறுதிகளே. தேர்தல் முறையை மாற்ற ரணில் இடமளிக்கவில்லை. ஐ. தே. க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

பிரதமர், அமைச்சர்களுக்கு செயற்பட இடமளிப்பதில்லை. அவருக்கு ஜனநாயகம் முக்கியமில்லை. கறுப்பு ஜுலைக்கு அன்றிருந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க கறுப்பு ஜுலையை பெரித்தாக கருதவில்லை. அன்று ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்கு அனுப்ப முயன்ற சந்திரிகா குமாரதுங்க இன்று மஹிந்த ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்ப முயல்கிறார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரிய

மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை பிரகடனத்தை ஐ. தே. க. வெற்றுக் காகிதமாக மாற்றியது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஊடக சுதந்திரம் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டினர். ஐ. தே. க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊடகவியலாளர்கள் குறித்து எதுவும் கிடையாது. எமது விஞ்ஞாபனத்தில் ஊடகவியலாளர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் விலக்கப்பட்டனர். இடையூறு செய்யப்பட்டது. மக்களுக்கு உண்மை செல்வதை தடுத்தனர். ஊடக அடக்குமுறை எமது ஆட்சியிலா ஐ. தே. க ஆட்சியிலா என மக்கள் அறிவர். குடும்ப ஆட்சி குறித்து குற்றஞ்சாட்டினாலும் அமைச்சர்களின் மனைவி, சகோதரர். தந்தை, உறவினர் என பலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இளைஞர்கள் ஐ. தே. க. மாயைக்கு ஏமாறக் கூடாது. 


Add new comment

Or log in with...