முறையற்ற நிதி செயற்பாடுகளை ஆராய விசாரணைக்குழு | தினகரன்


முறையற்ற நிதி செயற்பாடுகளை ஆராய விசாரணைக்குழு

 கோல்டன் கீ வைப்பாளர்களின் விவகாரம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் நிதி விடயங்களில் ஏற்பட்டுள்ள முறையற்ற செயற்பாடுகள், அதன் வளங்கள் முறையற்ற வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவை சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேற்படி விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி விடயங்களை பரிசீலிக்கும் விசாரணைக்குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கோல்டன் கீ வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக அதற்குரிய காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுண மகேந்திரன் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர்

கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதித்துறை வீழ்ச்சி தொடர்பில் நான் புதிதாக எதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.‘கோல்டன் கீ’ நிறுவனத்தின் கணக்கு வைப்பாளர்களாகிய நீங்கள் பொருளாதாரத்திலும் உள ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளமையை நாம் அறிவோம்.

கடந்த பல வருடங்களாக நீங்கள் உங்களுக்கான உரிமையைக் கோரி போராடியுள்Zர்கள். இதில் பாதிக்கப்பட்ட 160 பேர் மரணமடைந்துள்ளமையும் கவலையான விடயம்.

நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான நிகழ்வுகள் அதிர்ச்சியானவை. அரச மற்றும் தனியார் நிதி முகாமைத்துவம் தொடர்பில் நாட்டில் எப்போதும் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

தனியார் துறை நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக கூறும் போது தனியார்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளில் எப்போதும் அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுவது எந்த ஒரு நாட்டிலும் நடைமுறையிலுள்ள விடயமாகும்.

அரசாங்கத்தை புறக்கணித்துவிட்டு எந்த நாட்டிலும் எந்த தனியார் துறையும் முறையாக இருப்பது சாத்தியமில்லாதது.

கோல்டன் கீ வைப்பாளர்கள் அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி, அன்றிருந்த அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் போன்றவற்றை நோக்கும் போது பாரிய பிரச்சினைகள் இருந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் நீங்கள் பட்ட துன்பம் பாதிப்பும் யாவரும் அறிந்ததே. நாம் இது விடயத்தில் பெரும் கவலையடைகிறோம்.

உலகில் பல நாடுகளிலும் நாம் காண்பது இதுபோன்ற நிலையை கடந்த மூன்று வாரங்களாக கிரீஸில் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதை பலர் அறிந்திருப்பீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன்பே மீள வங்கிகள் திறக்கப்பட்டன. இது போன்ற நிலையை உலகின் பல நாடுகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் காண முடிகிறது.

அங்கு அரச நிதி முகாமைத்துவம், நிதிக் கொள்கை, தொடர்பான பொறுப்புகள் சரியாக இடம்பெறாதவிடத்து இதுபோன்ற வீழ்ச்சிகளுக்கு காரணமாகின்றன.

இலங்கையில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் பெற்ற வெற்றி மற்றும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஆகியன அரசாங்கம் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாம் அனைவரும் நிறைவேற்றி வருகிறோம். நாட்டில் நல்லாட்சி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. அதன் ஒரு அம்சமாகவே இந்த நிகழ்வையும் அதன் ஒரு பிரதிபலிப்பு என்றே கூறமுடியும்.

‘கோல்டன் கீ’ வைப்பாளர்களின் விவகாரம் எமது நாட்டின் நிதித்துறையில் நிலவிய நெருக்கடிகளோடு பின்னிப் பிணைந்ததொன்றாகவே நாம் கருதுகிறோம்.

எமது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நிதித் துறை அதிகாரிகள் அதனை நிவர்த்திசெய்வதில் படிப்படியாக வெற்றிகண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அமைச்சருக்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

அரசாங்கம் மேற்படி வைப்பாளர்கள் 10,000 ற்கு மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு உழைத்த அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த வைப்பாளர்கள் மூன்று கட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டம் கட்டமாக அவர்களது உரிமையைப் பெற்றுகொள்ள அரசாங்கம் வழி செய்யும். இது முதல்கட்ட நடவடிக்கையாகும்.

இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வழி வகுக்கும்.

இந்த கோல்டன் கீ வைப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி விடயங்களில் ஏற்பட்ட முறையற்ற முறைமை தொடர்பில் நோக்கும் போது நாம் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளோம்.

நாம் விரைவில் இது தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கொமிஷன் சபையொன்றை நியமிப்பதற்கும் கடந்த காலங்களில் அங்கு நடைபெற்ற நடவடிக்கைகள் அவை இடம்பெற்ற விதம் இந்த சொத்து மற்றும் பணங்கள் மோசமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பிலும் அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மேற்படி விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...