கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு இன்று பணம் மீளளிப்பு | தினகரன்

கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு இன்று பணம் மீளளிப்பு

அரசாங்கம் ஏற்கனவே உறுதிமொழி வழங்கியதற்கமைய கோல்டன் கீ கிரடிட் கார்ட் நிறுவனத்தில் வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த வைப்பாளர்களுக்கு பணம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறுகிறது. கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான பணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இரண்டு மில்லியன் ரூபாவுக்குக் குறைவாக வைப்பிலிட்டவர்களுக்கு முதல் ஒரு மாதத்திற்குள் பணம் மீள வழங்கப்படவுள் ளது. முதற்கட்டத்துக்காக திறைசேரி 544.3 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. கோல்டன் கீ வைப்பாளர்களின் 41 வீதமான பணத்தை வழங்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

10 மில்லியன் ரூபாவுக்குக் குறைவாக வைப்பிலிட்டவர்களுக்கு முதற்கட்டமாக பணத்தைக் கொடுத்து முடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் பாதிக்கப்பட்ட கோல்டன் கீ வைப்பாளர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்துள்ள சகல வழக்குகளையும் மீளப்பெற்றுக்கொண்டால் பணத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பணத்தை பெற்றுக்கொடுக்கும் நடுவராக மத்திய வங்கி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இன்றையதினம் இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...