புதிய சகாப்தம் ஆரம்பம்:

 நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஐம்பெரும் வேலைத்திட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

கொழும்பு விஹாரமாதேவி திறந்த வெளி அரங்கில் நேற்று 60 மாதச் செயற்திட்டமாக வெளியிடப்பட்ட இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் களுக்கும் கையளிக்கப்பட்டது.

ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியைப் பலப்படுத்தும் வகையில் நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் செயற்திட்டங்கள் இந்த ஐம்பெரும் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

* நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்

* ஊழல் மோசடிகளை ஒழித்தல்

* அனைத்து மக்களுக்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்தல்

* உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள்

* கல்வித் துறையை மேம்படுத்தல்

போன்ற ஐந்து கருப்பொருளைக் கொண்டதாக மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

இதனை வெளியிட்டு வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது எதிர்காலத்தையன்றி மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் திட்டமாக இந்த ஐம்பெரும் வேலைத்திட்டம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்தல் மற்றும் பத்து இலட்சம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது போன்ற செயற்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் மிகுந்த இடைவெளி காணப்படுகின்ற நிலையில் பாரிய அபிவிருத்திகள் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை இந்த பொருளாதார திட்டத்தில் வெளிப்படுகிறது.

குறிப்பாக இலங்கை கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிடையே இந்த அபிவிருத்தி இடைவெளி நிலவுகின்றன. ஜீ. எஸ். பி. வரிச் சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதன் மூலம் ஐரோப்பாவின் 50 கோடி மக்களை எமது வர்த்தக சந்தைக்குள் உள்வாங்க முடியும்.

உலக சந்தையுடன் போட்டி போடுவதற்கான வளர்ச்சியை நாம் ஏற்படுத்துவது அவசியமாகிறது. மிக விசாலமான உலகச் சந்தையில் நாம் பிரவேசிப்பதற்கு பொருட்கள், சேவைகள், விவசாயம் மற்றும் கடல் உற்பத்திகளில் உலகச் சந்தையின் ஒரு பகுதியினை நாம் கைப்பற்றுவது முக்கியமாகிறது. இதற்கான உபாய மார்க்கங்களும் இந்த விஞ்ஞாபனத்தில் உட்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன் ஒரு அம்சமாக நாடளாவிய ரீதியில் 45 பொருளாதார அபிவிருத்தி வலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தி, கைத்தொழில், விவசாயம், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அதற்கூடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேபோன்று அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, கண்டி, காலி, கிளிநொச்சி உட்பட 11 கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப அபிவிருததி வலயங்களை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விவசாய அபிவிருத்தி வலயங்கள் 23, மீன்பிடி அபிவிருத்தி வலயங்கள் 10 உட்பட ‘கிராமத்துக்கு நாடு’ என்ற திட்டத்தில் 2,500 கொத்தணிக் கிராமங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சூழலைப் பாதுகாப்பது, யானை - மனிதர் மோதல்கள் பாதிப்புகளைத் தடுப்பது. தேயிலை, இறப்பர் துறைகளை முன்னேற்றுவது சமுர்த்தித் துறையை பலப்படுத்துவது உள்ளிட்ட விடயங்களுக்கும் முக்கியத்துவமளிக்கப் பட்டுள்ளது. அரச சேவையில் பல முன்னேற்றகரமான திட்டங்கள் மேற்கொள் ளப்படவுள்ளன. அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை அடிப்படைச் சம்பளத்தில் சேர்ப்பது, குறைந்த விலையில் தவணை முறையில் வீடுகளை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் இதிலடங்குகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு சொந்த வீடு மற்றும் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு ‘லயன் காம்பரா’ யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போதையற்ற நாடு, திருட்டு ஊழல் இல்லாத நாடு என்ற தொனிப் பொருளில் பல்வேறு திட்டங்களும் எதிர்கால திட்டமாக இந்த 60 மாத செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)


Add new comment

Or log in with...