சட்டமா அதிபர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்கிறது | தினகரன்


சட்டமா அதிபர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்கிறது

 சட்டமா அதிபர் திணைக்களம் செய்யவேண்டிய வேலையை அமைச்சரவை செய்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முக்கு இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து பஸ்களைப் பெற்றுக் கொண்டமைக்கான பணம் செலுத்தாதது தொடர்பில் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்துள்ளது என அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வழக்குத் தொடர்வதாயின் ஒன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் செய்ய வேண்டும் அல்லது பொலிஸ் திணைக்களம் செய்ய வேண்டும் இதுவே முறைமை. எனினும் இவற்றின் கடமையை அமைச்சரவை ஏற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல் நடவடிக்கை களுக்காகப் பயன்படுத்திய பஸ் வண்டிகளுக் கான 14 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என அமைச்சிலிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முற்பணம் செலுத்தியமைக்கான இரண்டு சிட்டைகள் இருந்தன.

இதில் எங்கும் எனது பெயர் இருக்க வில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரின் பெயரே இருந்தது. எனவே இதற்கு நான் பொறுப்புக் கூற முடியாது. அதேநேரம், சுதந்திரக் கட்சியின் தலைமைத் துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுள்ளார். எனவே கட்சிக்கான வரவுசெலவையும் அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

எனவே இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.


Add new comment

Or log in with...