ஐ.ம.சு.முவில் போட்டியிடும் கம்பஹா மாவட்ட வேட்பாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் | தினகரன்

ஐ.ம.சு.முவில் போட்டியிடும் கம்பஹா மாவட்ட வேட்பாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரான ஜோன் திலக் வராகொட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கெதிராக நீதிமன்றம் செல்லவிருப்பதாக ஐ. தே. க வின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார்.

மேற்படி நபரின் குற்றச் செயல்களுக்காக நீதிமன்றம் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை முழுவதுமாக நிராகரிக்குமென்ற நம்பிக்கை தமக்கிருப்பதனால் கம்பஹா மாவட்ட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பணம் மற்றும் நேரத்தை வீணடிக்காது தத்தமது வீடுகளில் இருப்பதே சிறந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேர்தல் சட்டவிதிமுறை களை மீறிய குற்றச்சாட்டிற்காக கம்பஹா மாவட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட முடியாத நிலை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உருவாகும் என்பதால் ஐ. தே. க கம்பஹாவில் அமோக வெற்றியீட்டுவது உறுதியென்றும் அவர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ. ம. சு. மு வின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் 21 வது இடம்பிடித்திருக்கும் மேற்படி வேட்பாளர் ஒரு குற்றவாளியென பொலிஸ் திணைக்களம் நிரூபித்துள்ளது. இவர் பல தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் சென்று வந்தவர்.

இவருக்கெதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இத்தனை பிரபலமானதொரு குற்றவாளி பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கு நாம் இடமளியோம். குறித்த நபர் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலை மோசடியொன்றினும் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் எதற்காக இதனை செய்தார் என்பதனை கண்டறிவதற்காக தேர்தலுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வோம். அதற்கு முன்னர் அவரும் அவர் சார்பிலான ஏனைய வேட்பாளர்கள் போட்டியிடுவதனை தடுக்க நாம் நீதிமன்றம் செல்வோமென்றும் அவர் தெரிவித்தார்.

 

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...